அமீரகத்தில் நடக்கவிருக்கும் IPL-2020 கிரிக்கெட் தொடர்..!! செப்டம்பர் மாதம் போட்டிகள் தொடங்கும் எனவும் தகவல்..!!

உலகளவில் இருக்கக்கூடிய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான மற்றும் தனக்கென பல கோடி ரசிக பட்டாளங்களை கொண்டிருக்கும் இந்திய பிரீமியர் லீக்கின் (IPL) 2020 ம் வருடத்தின் கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதாக IPL குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் நடைபெறவிருக்கும் 13 வது IPL தொடரானது வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரையிலான நாட்களில் நடைபெற இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
IPL தலைவர் பிரிஜேஷ் படேல் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இந்த வருட IPL2020 நிகழ்விற்கான நாட்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் IPL2020 தொடர் நடத்துவது குறித்து கலந்துரையாடலை நடத்தியுள்ளோம், இந்த தொடரை செப்டம்பர் 19-நவம்பர் 8 வரையிலான நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது குறித்து அணி உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் தொடங்கினால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே செப்டம்பர் 15 வரை இருதரப்பு தொடர் நடைபெறவிருப்பதால், இரு நாட்டு வீரர்கள் போட்டியின் முதல் சில போட்டிகளில் பங்கேற்பதில் சிரமம் ஏற்படலாம். எனினும் இது ஒரு பிரச்சனையாக இருக்காது. இருதரப்பு தொடர் செப்டம்பர் 15 ல் முடிவடைந்தவுடன் அந்நாட்டு வீரர்களை நேரடியாக துபாய்க்கு பயணிக்க கேட்டுக்கொள்ளப்படும். அடுத்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் ஆளும் சபைக் கூட்டத்தில் இது பற்றிய இறுதி விஷயங்களைப் விவாதிப்போம்” எனவும் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார்.
IPL நிர்வாகத்தின் ஆளும் கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகுதான் போட்டிகள் நடத்தப்படவிருக்கும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்து BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் IPL2020 லீக்கிற்கான திட்டங்களை தயாரிப்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அணி உரிமையாளர்களுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்து வருவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் IPL அணி நிர்வாகத்தினர் மற்றும் வீரர்களை தவிர, BCCI ன் லாஜிஸ்டிக் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான IPL2020 தொடங்குவதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செயல்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற இடங்களுக்கு செல்லவிருப்பதாகவும் IPL தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.