குவைத் நாட்டில் இருக்கும் அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை..!! அமைச்சகம் அறிவிப்பு..!!

குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குவைத் நாட்டின் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனாவிற்கான இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் கொரோனாவிற்கான PCR சோதனைகளை மேற்கொண்டு வரும் அனைத்து மருத்துவமனைகளும் உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்கள் அடிப்படையில், முறையாக அங்கீகாரம் பெற்று செயல்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், குவைத் நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகளையும் அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனைக்காக விதிக்கப்பட்டிருக்கும் நிலையான விலையை மட்டுமே கட்டணமாக வசூலிப்பதை உறுதி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்புரியும் எந்த ஒரு மருத்துவமனை மீதும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.