ஷார்ஜாவில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்..!!
ஷார்ஜா அல் நஹ்தா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த இலவச கொரோனா பரிசோதனையானது தற்பொழுது ஷார்ஜாவின் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
ஷார்ஜா காவல்துறை, சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து தொடங்கப்பட்டுள்ள இலவச கொரோனா மருத்துவ ஸ்க்ரீனிங்கானது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஷார்ஜாவில் இருக்கும் அல் நஹ்தா பார்க்கில் அமைக்கப்பட்டிருக்கும் மொபைல் ஸ்க்ரீனிங் சென்டரில் ஜூலை 5 முதல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று முதல் கொரோனாவிற்கான பரிசோதனை அல் நஹ்தா பார்க்கில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இலவச கொரோனா பரிசோதனை திட்டத்தை ஷார்ஜாவில் இருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஷார்ஜா காவல்துறையின் உதவித் திட்ட துறையின் இயக்குனரான மேஜர் அப்துல் ரஹ்மான் பு கானெம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும், 10 நாட்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 200 பேருக்கு சோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கும் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னராகவே ஷார்ஜா காவல்துறையினரிடமிருந்து கொரோனாவிற்கான பரிசோதனை நடக்கவிருக்கும் இடம், பரிசோதனைக்கான நேரம் பற்றிய ஒரு செய்தியை தங்கள் செல்போனில் பெறுவார்கள் என்றும் பரிசோதனைக்கு செல்லவிருப்பவர்கள் தங்கள் செல்பவர்கள் தங்களின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் அவர்கள் தங்கள் செல்போனிற்கு வந்திருக்கும் SMS செய்தியையும் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.