அமீரக செய்திகள்

UAE: கொரோனாவால் வேலையை இழந்த இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!! 1 மில்லியன் டாலரை வென்று கோடீஸ்வரர் ஆனார்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக தனது வேலையை இழந்த இந்தியர் ஒருவர் இன்று நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவில் (Dubai Duty Free Millennium Millionaire Draw) 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

அபுதாபி நிறுவனம் ஒன்றில் HSE அதிகாரியாக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த 30 வயதான நவநீத் சஜீவன் என்பவர், தொற்றுநோய் காரணமாக கடந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், தற்போது அவர் நோட்டீஸ் பீரியடில் (அவரது கடைசி வேலை நாள் டிசம்பர் 28) தனது நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் வேறு வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் தற்சமயத்தில் அவர் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவில் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையினை வென்றிருப்பது அவரது வாழ்வையே மாற்றியமைத்துள்ளது.

ஒரு வயது குழந்தைக்கு தந்தையான நவநீத் கடந்த நவம்பர் 22 அன்று மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 345 இலிருந்து 4180 என்ற எண் கொண்ட டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் வெற்றி பெற்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. தற்பொழுது நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் வென்ற இந்த பரிசுத்தொகையை எனது மற்ற நான்கு அலுவலக நண்பர்கள் மற்றும் எனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதில் எனக்கு மட்டும் 200,000 டாலர் கிடைக்கும். இது எனக்கு ஒரு பெரிய தொகை” என்று கூறியுள்ளார்.

அவரது மனைவி அமீரகத்தில் வேலை செய்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும், தான் வேலையை இழந்ததால் வேறு வேலை தேடிக்கொண்டு இருந்ததாகவும் ஒருவேளை, வேலை கிடைக்கவில்லையென்றால் கேரளாவிற்கே மீண்டும் செல்ல நினைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது அவருக்கு 100,000 திர்ஹம் கடன் இருப்பதால் வெற்றி பெற்ற தொகையில் கடனை அடைத்து விட்டு மீதமிருக்கும் தொகையை தனது எதிர்காலத்திற்கான சேமிப்பாக வைக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 1999 இல் மில்லினியம் மில்லியனர் ப்ரோமோஷன் தொடங்கியதிலிருந்து பார்க்கும்பொழுது தற்பொழுது வென்றிருக்கும் சஜீவன் இந்த ப்ரோமோஷனில் 1 மில்லியன் டாலர் வென்ற 171 வது இந்திய நாட்டவர் ஆவார். துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!