அமீரக செய்திகள்

விண்வெளியில் வெற்றிகரமாக 200 ஆராய்ச்சிகளை மேற்கொண்ட சுல்தான் அல் நெயாடி..!! அமீரக தலைவர்களிடமிருந்து குவியும் பாராட்டுகள்….!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆறு மாத கால பயணமாக விண்வெளிக்குச் சென்றிருந்த அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி அவர்கள், இன்று (செப்டம்பர் 4, திங்கள்கிழமை) காலை அமீரக நேரப்படி சரியாக 8.17 மணியளவில் பாதுகாப்பாக பூமியை வந்தடைந்துள்ளார்.

இதன் மூலம், அரபு நாடுகளில் இருந்து விண்வெளிக்குச் சென்று நீண்ட நாட்கள் தங்கிய முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். எனவே, அமீரக மக்கள் மற்றும் அமீரக தலைவர்களிடமிருந்து அவருக்கு ஏராளமான வாழ்த்துச் செய்திகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், X தளத்தில் அல் நெயாடி பற்றி பின்வருமாறு எழுதியிருக்கிறார்; “விண்வெளி ஆய்வில் பெரும் முன்னேற்றங்களை அடைந்ததற்காக நாட்டு மக்கள் உங்களைப் பற்றியும் ஒட்டுமொத்த குழுவைப் பற்றியும் பெருமிதம் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு தேசத்தின் கனவுகளை புதிய எல்லைகளுக்கு கொண்டு சென்றுள்ளீர்கள், உங்கள் விண்வெளிப் பயணத்தையும் பாதுகாப்பாக திரும்பியிருப்பதையும் நாங்கள் கொண்டாடுகிறோம்” என்று பாராட்டியுள்ளார்.

சுமார் 186 நாட்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) செலவழித்த பிறகு, சுல்தான் அல்நெயாடி பயணித்த SpaceX Dragon விண்கலம், ஃபுளோரிடாவின் ஜாக்சன்வில்லி கடற்கரையில் அட்லாண்டிக் பெருங்கடலில் பத்திரமாக இறங்கியது.

இது குறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் X தளத்தில் கூறியிருப்பதாவது; “சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கிவிட்டு, தற்போது பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடியின் சாதனைக்காக, அமீரக மக்கள் அனைத்து அரபு இளைஞர்களையும் நாங்கள் வாழ்த்துகிறோம். சுமார் 4,400 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் தங்கிய சுல்தான், அங்கு வெற்றிகரமாக 200 அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு மில்லியன் கணக்கான அரபு இளைஞர்களை ஊக்குவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

இறுதியாக, அட்லாண்டிக் கடலில் டிராகன் கேப்ஸ்யூல் பத்திரமாக இறங்கிய பிறகு, விண்கலத்திலிருந்து வெளியே வந்த அல் நெயாடியை ஆரவாரமான சத்தங்களும் கைதட்டல்களும் வரவேற்றன. விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பியுள்ள சுல்தான் இயல்பு நிலைக்குத் திரும்ப மூன்று வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகுதான், அவர் அமீரகத்திற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இவர்களுடன் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும், அவரது வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், சையதின் தொலைநோக்கு பார்வையால் உந்தப்பட்டு, அமீரக பாலைவனத்திலிருந்து விண்வெளிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், சுல்தானின் 200 ஆராய்ச்சிகள் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், எமிராட்டி விண்வெளி வீரரான சுல்தான் அல் நெயாடி, மிக நீண்ட அரேபிய விண்வெளிப் பயணத்தின் வெற்றிக்குப் பிறகு, பூமிக்கு அவர் பாதுகாப்பாகத் திரும்பியதற்கு கடவுளுக்கு நன்றி கூறும் அதேவேளையில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், எமிரேட்ஸ் ஏர்லைன் குழுமத்தின் CEO ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள், சுல்தானின் மிகப்பெரிய சாதனையை பாராட்டியுள்ளார். அதேசமயம், அமீரகத்தின் முகமது பின் ரஷித் விண்வெளி மையம் (MBRSC) சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோக்களில், விண்கலத்திற்கு வெளியே அல் நெயாடி வரும்போது, மூத்த அதிகாரிகள் கைதட்டி ஆரவாரம் செய்வதைக் காட்டுகின்றன.

MBRSC இன் இயக்குநர் ஜெனரல் சலீம் ஹுமைத் அல்மர்ரி அவர்களும் தனது மகிழ்ச்சி பற்றி மனம் திறந்துள்ளார். சுல்தான் அல்நெயாடியின் வெற்றிகரமான அரேபிய விண்வெளி மிஷன், UAE யைச் சேர்ந்த பார்வையாளர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் ஒரு கல்வி மற்றும் அவுட்ரீச் திட்டத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நாட்டின் புத்திசாலித்தனமான தலைமையின் தொலைநோக்கு பார்வை மற்றும் ஆதரவு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகாது என்றும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!