காலாவதியான விசிட், சுற்றுலா விசா நீட்டிப்பு ரத்து..!! நாட்டை விட்டு வெளியேற கால அவகாசம் வெளியிட்ட ICA ..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த சலுகையானது ரத்து செய்யப்பட்டதை அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் காமிஸ் அல் காபி அவர்கள் நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். விசா நீட்டிப்பு ரத்து தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காலாவதியான ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களுக்கு தங்களின் ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள ஜூலை 12 முதல் மூன்று மாத காலத்திற்கு அவகாசம் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், “காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்கள் வைத்திருப்பவர்களின் விசாக்களானது தற்பொழுது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஜூலை 12 ஆம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் தங்களின் விசாக்களை புதுப்பித்துக்கொள்ள சலுகை காலம் வழங்கப்படும். சலுகை காலம் முடிந்த பின்னரும் தங்களின் ஆவணங்களை புதுப்பிக்காதவர்களுக்கு அபராதம் வழங்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
விசா நீட்டிப்பு ரத்து தொடர்பான முந்தைய அறிவிப்பில், ரெசிடென்சி விசாக்கள் மற்றும் எமிரேட்ஸ் ஐடி போன்றவற்றை புதுப்பிப்பதற்கான விளக்கமே கொடுக்கப்பட்டிருந்தது. குடியிருப்பாளர்களை போன்றே இந்த ஆண்டு இறுதி வரையிலும், விசா நீட்டிப்பு பெற்ற விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் இருப்பவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நேர்காணலில் மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்களுக்கு வழங்கப்பட்ட விசா நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டிருந்ததை போன்றே, மார்ச் 1க்குப் பிறகு காலாவதியாகி இருக்கக்கூடிய விசிட் விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். விசிட் விசா காலாவதியாகி இருக்கக்கூடியவர்கள் அமீரகத்தில் இருந்து வெளியேற ஜூலை 12 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமீரகத்தில் தொடர்ந்து தங்க விரும்புபவர்கள் அமீரக சட்டப்படி, புதிய விசா எடுத்துக்கொண்டு தொடர்ந்து தங்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்திற்குள் இருக்கும் காலாவதியான விசாக்கள் மற்றும் அடையாள அட்டைகள் வைத்திருப்போர் தங்களின் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அதற்கான கால அட்டவணையையும் ICA வெளியிட்டிருந்தது.
UAE : காலாவதியான ரெசிடன்சி விசா, எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிக்க கால அட்டவணையை வெளியிட்ட ICA..!!
source : Gulf News