சிறைக்கைதிகள் நாடு திரும்ப 1.47 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள விமான டிக்கெட்டுகளை வழங்கிய துபாய் காவல்துறையினர்..!!

துபாயில் குற்றம் புரிந்து சிறை தண்டனை பெற்று வரும் கைதிகளில் தற்போது சிறைத் தண்டனையை நிறைவு செய்த கைதிகளில் சுமார் 1,145 கைதிகள் நாடு திரும்புவதற்காக 1.47 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள விமான டிக்கெட்டுகளை துபாய் காவல்துறையினர் வழங்கியுள்ளனர். காவல்துறையினரின் இந்த மனிதாபிமான செயலால் தற்போது விடுதலை பெற்ற கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
சிறை துறையின் தண்டனை மற்றும் திருத்தும் பொதுத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் அலி அல் ஷமாலி, காவல்துறையினரின் முன்முயற்சியால் தங்களது கூட்டாளர்களுடன் இணைந்து சிறை கைதிகளுக்கான விமான டிக்கெட்டுகளைப் பெற்றதாகக் கூறியுள்ளார். மேலும் இந்த முன்முயற்சி குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயின் போது கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எங்களின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி மற்றும் உதவி வழங்கும் பொருட்டு காவல்துறையின் சார்பாக தொடங்கப்பட்ட “பல்வேறு வருடாந்திர மனிதாபிமான முயற்சிகளின்” ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார். இது தவிர கைதிகளின் குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கு நிதியுதவி செய்தல், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் விநியோகித்தல், வசிப்பதற்கு தேவையான செலவுகள், மருத்துவ உபகரணங்கள், உணவிற்கான உதவி வழங்குதல் மற்றும் ஈத் ஆடைகளை விநியோகித்தல் ஆகியவையும் காவல்துறையின் மனிதாபிமான முயற்சிகளில் அடங்கும் என்று அலி அல் ஷமாலி குறிப்பிட்டுள்ளார்.