அமீரக செய்திகள்

UAE: ஈத் அல் அதா விடுமுறையில் ஹாலிடே பேக்கேஜ்களுக்கான தேவை 50% அதிகரிப்பு!!- விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தாமதிக்க வேண்டாம்..

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் தியாகத் திருநாளான ஈத்-அல்-அதாவை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக நீண்ட விடுமுறையை அனுபவிக்க குடியிருப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பலர் இந்த விடுமுறை நாட்களை வேறொரு நாட்டில் கொண்டாட சிறந்த ஹாலிடே பேக்கேஜ்களில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

அதுபோக, இந்தாண்டு பள்ளி கோடை விடுமுறையும், ஈத் விடுமுறையும் ஒரு சேர அமைவதால், குடியிருப்பாளர்கள் பலர் தங்கள் பயணங்களை இணைத்து இரண்டு நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிடுவதாகாக் கூறப்படுகிறது. எனவே, ஈத்-அல்-பித்ரை விட ஈத்-அல்-அதா விடுமுறைக்கு ஹாலிடே பேக்கேஜ்களின் தேவை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஈத் அல் அதா விடுமுறையுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தாண்டு தியாகத் திருநாள் கொண்டாட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் ஐந்து அல்லது ஆறு நாள் தொடர் விடுமுறையை அனுபவிக்கலாம். அதாவது, வானியல் கணக்கீடுகளின் படி, ஜூன் 27 (செவ்வாய்) முதல் ஜூன் 30 (வெள்ளி) வரை பண்டிகை விடுமுறையை அனுபவிப்பதுடன், வார இறுதி நாட்களையும் (சனி-ஞாயிறு) சேர்த்து ஆறு நாள் விடுமுறையை பெறுவார்கள்.

இதன் காரணமாக, ஈத் அல் அதா விடுமுறை பயணத்திற்கான தேவை தற்போது அதிகரித்திருப்பதாகவும், அதிலும் பெரும்பாலும் ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகமாக உள்ளதாகவும் டிராவல் ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அமீரகத்திலிருந்து இந்த இடங்களுக்கு செல்ல விசா பெறுவது எளிதாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்து தவிர மற்ற ஐரோப்பிய மற்றும் ஷெங்கன் இடங்களுக்கு விசா பெறுவது இன்னும் சவாலாக இருப்பதால், அடுத்து வரவிருக்கும் வாரங்களில் பயணத் தேவை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக, தாமதமாக முன்பதிவு செய்தால் அதிகப்படியான கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும், எனவே, முன்கூட்டியே முன்பதிவு செய்தால் விமான டிக்கெட்டுகளில் நல்ல தொகையை சேமிக்க முடியும் என்றும் பயணிகளை அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஓய்வுநேரப் பயணம் (Leisure travel):

ஈத் அல் அதா மற்றும் பள்ளியின் கோடை விடுமுறை ஆகிய இரண்டிற்கும் பயண முன்பதிவுகள் அதிகமாக உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் ஓய்வு விடுமுறை நாட்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவதாக musafir நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 25 சதவீதம் பேர் வேறொரு நாட்டிற்கு சுற்றுலா சென்று பின்னர் தங்கள் சொந்த நாட்டிற்கு பயணிக்கவும், மீதி 25 சதவீதம் பேர் தங்கள் சொந்த நாடுகளுக்கு நேரடியாக செல்வதையும் கருத்தில் கொண்டுள்ளதாக ஆன்லைன் டிராவல் ஏஜென்சியான Musafir.com கூறியுள்ளது.

அத்துடன் Musafir-ல் உள்ள முன்பதிவுகளின் அடிப்படையில், கென்யா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற விசா இல்லாத இடங்களுக்கும், அடுத்ததாக அஜர்பைஜான், ஆர்மீனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (CIS) நாடுகளுக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் பயணிக்க விரும்புகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சவூதி அரேபியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், நேபாளம், எகிப்து, கிராபி, ட்ராப்ஸோன் மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை அமீரக பயணிகளுக்கான புதிய வளர்ந்து வரும் இடங்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, இன்னும் சில குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர்-மலேசியா, பாங்காக்-பட்டாயா, சுவிட்சர்லாந்து-பாரிஸ் அல்லது இத்தாலி, மற்றும் ஜார்ஜியா-அர்மேனியா அல்லது அஜர்பைஜான் போன்ற இரண்டு நாடுகளை சுற்றிப்பார்க்கும் வகையில் இணைப்புப் பயணம் மேற்கொள்ள விரும்புவதும் முன்பதிவுகளுக்கான தேடல் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!