அமீரக செய்திகள்

துபாயில் வசிப்பவரா நீங்கள்.. கொரோனா சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றால் என்ன செய்வது.. ??

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்பட்டவரிடமிருந்து வைரஸ் பிறருக்கு பரவுவதை தடுக்கவும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றவும், நம்மில் எவரேனும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், தற்போதைய நடைமுறையின்படி நாம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் பங்கு வகிக்கும் அதே வேளையில், குடியிருப்பாளர்கள் கொரோனா சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்தவோ அல்லது சிகிச்சை மேற்கொள்ளவோ தேவைப்பட்டால், துபாயில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்கள் பின்பற்றக்கூடிய வழிகாட்டுதல்கள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றால் என்ன செய்ய வேண்டும்..?

>> கொரோனாவிற்கான PCR சோதனையில் எவரும் பாசிட்டிவ் முடிவை பெற்றால் அத்தகைய நபர்கள் எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும் பத்து நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

>> துபாய் ஹெல்த் அத்தாரிட்டியின் (DHA) படி, பாசிட்டிவ் முடிவை பெற்ற நபர்கள் முதலில் கோவிட்-19 DXB மொபைல் அப்ளிகேஷனைப் பதிவிறக்க வேண்டும். பின்னர் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தங்களை ஒரு தனி அறையில் உடனடியாக தனிமைப்படுத்துவதுடன், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பாசிட்டிவ் முடிவை பெற்ற எவரேனும் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கத் தவறினால் 10,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

>> தனிமைப்படுத்தல் காலம் PCR சோதனை எடுக்கப்பட்ட நேரத்திலிருந்து தொடங்கும். அறிகுறியற்ற மற்றும் லேசான அறிகுறிகள் உள்ள நபர்கள் பத்து நாட்களுக்கு வீட்டில் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதனால் அவர்கள் தனித்தனியாக அறைகளில் தங்க வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர் பத்து நாட்கள் சுய-தனிமைப்படுத்தலை முடித்தவுடன் மற்றொரு PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

>> தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர் மிகவும் தீவிரமான அறிகுறிகளை உருவாக்கத் தொடங்கினால், ஒரு விர்ச்சுவல் ஆலோசனையை முன்பதிவு செய்ய இலவச எண்ணான 800 342 இல் DHA ஐ அழைக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பிறகு, அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது கோவிட்-19 DXB செயலி மூலமாகவோ அனுமதிச் சான்றிதழ் அனுப்பப்படும்.

வீட்டில் தனிமைப்படுத்த முடியாவிட்டால் என்ன செய்வது..?

>> DHA அறிவுறுத்தலின்படி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் தங்களை நிறுவன தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இருப்பினும், அவர்கள் அதற்கு கட்டணமாக பணம் செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் யார்..?

>> அமீரக அரசின் வழிகாட்டுதல்களின்படி, நெருங்கிய தொடர்பு என்பது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் ஒரு மீட்டர் அல்லது அதற்கும் குறைவான அருகில், 15 நிமிடங்களுக்கு குறையாமல் தொடர்பில் இருந்த நபர் நெருங்கிய தொடர்பில் இருந்தவராக கருதப்படுவார்.

>> இரண்டாவதாக, கொரோனா தொற்றிற்கான அறிகுறிகளைக் காட்டுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லது பாசிட்டிவ் முடிவை பெற்றவரின் PCR சோதனை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லது தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் பத்து நாட்களில் நேரடியாக அதாவது கைகுலுக்கல், தொடுதல் போன்ற உடல் ரீதியான தொடர்பில் இருக்கும் நபரும் நெருங்கிய தொடர்பில் இருந்தவராக கருதப்படுவார்.

ஐக்கிய அரபு அமீராகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 50 க்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், தற்போது 2000 க்கும் அதிகமாக தினசரி பதிப்புகளாக பதிவாகி வருகிறது. நேற்றைய நாளின் நிலவரப்படி, அமீரகத்தில் 2500 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று, அபுதாபியில் வசிக்க கூடிய குடியிருப்பாளர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் வசிப்பவர்கள் கொரோனா சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றால் என்ன செய்வது..!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!