இந்திய நாட்டவர்கள் தற்போது விசிட் விசாவில் UAE வர அனுமதியில்லை..!! விசிட் விசா குறித்து இந்திய தூதர் அளித்த தகவல்கள்..!!
வெளிநாட்டவர்கள் விசிட் மற்றும் டூரிஸ்ட் விசாக்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதிக்கப்பட்டுவரும் வேளையில், பயண நெறிமுறைகள் குறித்த தெளிவான அறிவிப்பு வரும் வரையிலும் இந்திய நாட்டவர்கள் விசிட் விசாக்கள் மூலமாக அமீரகம் வருவதற்கு தற்போது வரை அனுமதியில்லை என அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே இயக்கப்படும் சிறப்பு விமானங்கள், விசிட் விசா வைத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய தூதர் கூறுகையில், “இந்த கட்டத்தில், விசிட் விசா பெற்று அமீரகத்திற்கு வர ஐக்கிய அரபு அமீரக அரசு அனுமதிக்கிறதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்த அமீரக அரசின் தெளிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், விசிட் விசாக்களில் பயணிக்க மக்களை அனுமதிக்கலாமா என்று இந்திய அரசும் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தியாவில் சர்வதேச விமான நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விசிட் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எவ்வாறு பயணிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றால் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் விமானங்கள் செல்லுபடியாகும் அமீரக ரெசிடன்சி விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்களை மட்டுமே ஏற்றி செல்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“எங்களிடம் விசிட் விசா உள்ளது. நீங்கள் எங்களை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்?” என மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள். சில பிரச்சனைகள் இருப்பதால் விசிட் விசாக்களில் இந்திய குடிமக்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே விசிட் விசாவில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக நாங்கள் விளக்கங்களைக் கேட்டுள்ளோம். அதன்படி நாங்கள் முடிவு செய்வோம்” என்று பவன் கபூர் அவர்கள் கூறியுள்ளார். மேலும் தூதர் கூறுகையில், துபாய் அரசு தற்போது விசிட் விசாக்களை வழங்குவதால், துபாய்க்கு பயணிக்க விரும்பும் மக்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு தூதரகம் பரிந்துரைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், “குடும்ப உறுப்பினரை சந்திப்பதற்காகவோ அல்லது உறுதிப்படுத்தப்பட்ட வேலை இருந்தாலோ அவர்கள் விசிட் விசாவில் அமீரகம் வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களின் முக்கிய கவலை என்னவென்றால், வேலை தேடுவதற்காக அமீரகம் வரும் இந்திய மக்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. நீங்கள் வேலை தேடுவதற்காக பயணம் செய்கிறீர்கள் என்றால், அவ்வாறு செல்ல இது சரியான நேரமா என்று நாங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் சமீபத்திய பயண ஆலோசனையின்படி, அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்பட்ட செல்லுபடியாகும் குடியிருப்பு விசா மற்றும் ICA அல்லது GDRFA அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.