UAE : ஏப்ரல் மாதம் காணாமல் போன இந்தியரின் உடல் சடலமாக மீட்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கடந்த ஏப்ரல் மாதத்தில் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்பொழுது மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் தேவகுமார் (வயது 54) என்ற நபர் துபாயில் இருக்கும் ஒரு தனியார் வாடகை கார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 23 ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல வேண்டி டிக்கெட் முன்பதிவு செய்திருந்த அவர் திடீரென காணாமல் போய்விட்டதால் துபாயை சேர்ந்த சமூக சேவகராக நசீர் வட்டனப்பள்ளி என்பவர் தேவகுமாரை காணவில்லை என துபாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வட்டனப்பள்ளி கூறுகையில், “காணாமல் போய்விட்ட தேவகுமாரை தேடும் பணியில் ஈடுபட்ட துபாய் காவல்துறையினர் கடந்த மாதம் ஒரு துறைமுகத்திலிருந்து கடலில் சிதைந்த நிலையில் இருந்த ஒருவரின் உடலை கண்டுபிடித்த பின்னர் காவல்துறையினரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “கண்டுபிடிக்கப்பட்ட உடல் மோசமாக சிதைந்து இருந்ததால் அவரின் உடலை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. எனவே DNA சோதனை மேற்கொள்ளப்பட இருந்தது. அத்துடன் அந்த உடலின் பேண்ட் பாக்கெட்டில் ஒரு சாவியும் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவகுமார் தங்கியிருந்த இடத்தின் சாவி இதுதானா என்று அதிகாரிகள் சோதித்தனர். அந்த சாவியைக்கொண்டு தேவகுமார் தங்கியிருந்த வீட்டின் கதவை திறக்க முயற்சித்ததில் கதவு திறந்தது. அத்துடன், DNA சோதனை முடிவுகளும் அந்த உடல் தேவகுமார்தான் என உறுதிப்படுத்தியது.” என்று வட்டனபள்ளி கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, இறந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரது உடலை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தகனம் செய்ய வட்டனப்பள்ளி தேவகுமார் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் பாதிப்பினால் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்களை தொடர்ந்து அவர் மனச்சோர்வடைந்ததாகக் கூறப்படுகிறது. கொரோனாவின் தாக்கத்தினையொட்டி
விதிக்கப்பட்ட சர்வதேச போக்குவரத்து தடையினால் தனது சொந்த ஊருக்கு சென்று தன்னுடைய இரு குழந்தைகளை பார்க்க முடியாமல் போனதை எண்ணியும், தனது வேலையில் தனக்கு சம்பளக் குறைவு ஏற்பட்டு விடுமோ என அஞ்சியும் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.