அமீரக செய்திகள்

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு அபுதாபி அரசு ஒப்புதல்..!! 11 மையங்களில் தடுப்பூசி சேவை கிடைக்கும் என அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பூசியான ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி துபாயில் மட்டும் போடப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அபுதாபியில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி சுகாதாரத் துறை (DoH) தெரிவித்துள்ளதன்படி, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி அபுதாபி சிட்டி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா பகுதிகளில் உள்ள 11 மையங்களில் கிடைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் முன்கூட்டியே அப்பாய்ண்மென்ட் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த போதிலும், சில மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அவர்களில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்றவர்கள், வேறு எந்த கோவிட் -19 தடுப்பூசிகளின் ஒரு டோஸ் அல்லது பல டோஸ்களைப் பெற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தடுப்பூசி போடுவதற்கு மருத்துவக்குழுவின் மதிப்பீட்டால் தீர்மானிக்கப்படும் சில நிபந்தனைகள் உள்ளவர்கள், தடுப்பூசி போடுவதனால் கடுமையான அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளவர்கள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்.

தேசிய தடுப்பூசி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சீன சினோபார்ம் வழங்கப்பட்ட பின்னர் அபுதாபியில் கிடைக்கக்கூடிய இரண்டாவது தடுப்பூசி ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி ஆகும்.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி எடுப்பதற்கான சந்திப்புகளை பதிவு செய்ய, குடியிருப்பாளர்கள் ஆறு SEHA மையங்களில் (அபுதாபியில் 3, அல் அய்னில் 2 மற்றும் அல் தஃப்ராவில் 1) ஏதேனும் ஒரு மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக 80050 ஐ அல்லது 8004959 ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முபதலா ஹெல்த் (Mubadala health) மையங்களுக்கு ஈமெயில் (அபுதாபியில் 4 மற்றும் அல் அய்னில் 1) அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க சுகாதாரத்துறையின் முயற்சிகளுக்கு ஏற்ப, சினோபார்ம் தடுப்பூசி இப்போது அபுதாபி முழுவதும் 133 இடங்களில் கிடைக்கிறது. இந்த இடங்களில் SEHA வின் ஹெல்த் அண்ட் டிரைவ் த்ரூ சென்டர், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மஜ்லிஸ் ஆகியவை அடங்கும்.

தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை (NCEMA) செய்தித் தொடர்பாளர் சைஃப் அல் தஹேரி, 16 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு வலியுறுத்திய சில மணிநேரங்களிலேயே இந்த முக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், முதல் டோஸ் 5,081,853 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!