UAE : 23,000 தொழிலாளர்களுக்கு இருப்பிடம் தேடி சென்று சம்பள நிலுவைத்தொகையை வழங்கிய தொழிலாளர் நீதிமன்றம்..!!
அபுதாபி நீதித்துறையின் சிறந்த நடவடிக்கையால் இந்த ஆண்டு மட்டும் அபுதாபியின் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த 23,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாத ஊதியம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலும் இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் இருந்து இதுவரையிலும் 261 மில்லியன் திர்ஹம் ஊதியத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு தங்களின் ஊதியங்களை முறையாகப் பெறுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் செயல்படுத்திய தொடர் நடவடிக்கைகளின் பலனாக தொழிலாளர்கள் தங்களுக்கு செலுத்தப்படாத ஊதியத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அபுதாபி தொழிலாளர் நீதிமன்றத்தின் தலைவர் அப்துல்லா அல் நுவைமி கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக அபுதாபி நீதித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய நீதித்துறை வசதிகளின் கீழ் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை திருப்பிச் செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவல் அதிகரித்த காலங்களில் கூட தொழிலாளர் நீதிமன்றத்தின் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும் தொழிலாளர்களுக்கென பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதில் ஒரு பகுதியாக, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் காசோலைகளை அவர்களின் தங்குமிடத்திற்கே சென்று வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜகாத் நிதி மற்றும் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அறக்கட்டளை மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை போன்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாத ஊதியங்களை வழங்குவதற்கு நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாகவும் அல் நுவைமி அவர்கள் கூறியுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇந்த தொழிலாளர் நீதிமன்றத்தின் மூலம் கடந்த ஆண்டு சுமார் 577 மில்லியன் திர்ஹம் தொழிலாளர்களுக்கு திருப்பிச் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.