அமீரக செய்திகள்

UAE: 300 டன் குப்பைகளுக்குள் தொலைந்த பர்ஸ்… விடாமல் தேடி கண்டெடுத்த துப்புறவு தொழிலாளிகள்…

அமீரகத்தில் மறந்து போய் தனது பர்ஸை குப்பைத்தொட்டியில் வீசிய பெண்ணிற்காக 300 டன் கொண்ட குப்பைகளுக்கு நடுவே தேடி அதை மீட்டெடுத்துள்ளனர் கழிவு மேலாண்மை ஊழியர்கள்.

ஷார்ஜாவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் வேலை முடிந்து இரவு 10 மணிக்கு தங்கியிருந்த இடத்திற்கு திரும்பும் போது தனது காலி சிப்ஸ் பாக்கெட்டை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். அவர் சிப்ஸ் பாக்கெட்டை குப்பையில் போடுகையில் தனது பர்ஸையும் தற்செயலாக வேறொரு சிந்தனையில் குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறார்.

இதனை அவர் அடுத்த நாள் காலையில் தான் உணர்ந்திருக்கிறார். உடனே ஓடிச்சென்று குப்பைத்தொட்டியை பார்க்கையில் குப்பையினை அப்பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் நிறுவனமானது எடுத்துச் சென்றுள்ளது.

இதனால் கலங்கிப் போயிருந்தவருக்கு அவ்வழியே சென்ற இந்தியப் பெண் அவரை நெருங்கி விபரங்களை அறிந்து கொண்டிருக்கிறார். பின் அந்த இந்தியப்பெண் அப்பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் கழிவு மேலாண்மை நிறுவனமான Bee’ah அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பர்ஸ் கிடைக்கும் வரை கூடவே இருந்திருக்கிறார்.

உள்ளூர் கழிவு மேலாண்மை நிறுவனமான Bee’ah, இவ்விஷயத்தை அறிந்ததும் காணாமல் போன சிறிய பர்ஸை தேடும் முயற்சியில் இறங்கியது. 300 டன் குப்பைகள் கொண்ட இடத்தில் பர்ஸை கண்டுபிடிக்க ஊழியர்கள் களத்தில் இறங்கினர்.

இது குறித்து Bee’ah இன் மூத்த மேலாளர் Louie Gabilagon கூறுகையில், ஒரு வைக்கோல் போரில் ஒரு ஊசியை மீட்டெடுப்பது போன்றது இந்த வேலை என்று விவரித்துள்ளார்.

பல மணி நேர தேடலுக்குப் பின் ஊழியர் ஒருவர் பர்ஸை தேடி கண்டுபிடித்துள்ளார். அந்த பர்ஸில் பணம், வங்கி அட்டைகள், எமிரேட்ஸ் ஐடி மற்றும் பெண்ணின் தொழில்முறை சான்றுகள் இருந்துள்ளன.

மேலும் அவர் கூறுகையில், “பாலித்தீன் பையில் பர்ஸ் இருந்தது என்பது மட்டுமே எங்களுக்கு கிடைத்த ஒரே துப்பு. தினசரி 2,000 டன் கழிவுகள் வரும் இடத்தில் அதைக் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. அதிர்ஷ்டவசமாக, பர்ஸை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். இது சஜ்ஜாவில் உள்ள எங்கள் செயலாக்க வசதியை அடைந்திருந்தால் அதை நாங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது”என்று கூறியுள்ளார்.

இது போன்று தற்செயலாக தங்கள் விலையுயர்ந்த பொருட்களை குப்பைத் தொட்டியில் வீசிய பலரிடமிருந்து அவர்களின் ஹாட்லைன் 800BEEAH க்கு வழக்கமாக அழைப்புகள் பெறுவதாக தெரிவித்த அவர் பெரும்பாலான அழைப்புகள் பாஸ்போர்ட்டுகளுக்கானவை என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!