அமீரக செய்திகள்

ஆங்காங்கே பெய்து வரும் மழை..!! பசுமையாக மாறிவரும் வறண்ட நிலம்..!! அமீரகத்தில் தொடங்கிய மழைக்காலம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கோடைகாலம் முடிவடைந்து வசந்த காலம் நீடித்த நிலையில் அமீரகத்தின் வானிலை நிபுணர் ஒருவர், அக்டோபர் 16 ஆம் தேதியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால் குடியிருப்பாளர்கள் வரும் நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம் என அவர் கூறியுள்ளார்.

எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு கூட்டமைப்பின் உறுப்பினருமான இப்ராஹிம் அல் ஜர்வான் கூறுகையில் “அல் வாஸ்ம் எனும் மழைகால பருவம் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து குளிர்காலம் விரைவில் வரும்” என தெரிவித்துள்ளார்.

இது அரேபிய தீபகற்பம் முழுவதும் நன்மை பயக்கும் மழையின் சிறந்த பருவமாகும். இந்த காலகட்டத்தில் அமீரகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், லேசானது முதல் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் குளிர்காலம் தொடங்கும் முன் இந்த காலகட்டத்தில் குறைந்த வெப்பநிலை அமீரகத்தில் நிலவும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில், அமீரகத்தில் அதிகபட்சமாக எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 35°C ஆகும் மற்றும் வெப்பநிலை 10°C வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில் “இந்த பருவம் பொதுவாக மழை மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக தாவர வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கு சாதகமாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.

கடலில் மீன்கள் அதிகமாக இருக்கும் என்பதால் மீன் பிடிப்பதற்கும் ஏற்ற காலமாகும். மேலும் இந்த பருவத்தில் ஏற்படும், மழை அல்லது தூசி புயல்கள் மற்றும் குறைந்த தெரிவுநிலை (visibility) உள்ளிட்ட வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!