அமீரக செய்திகள்

Hayat-Vax: சொந்தமாகவே கோவிட்-19 தடுப்பூசியை தயாரிக்கும் அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கெதிராக சினோபார்ம், ஃபைசர், COVAX போன்ற தடுப்பூசிகள் குடியிருப்பாளர்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகம் சொந்தமாகவே ஹயாத்-வாக்ஸ் (Hayat-Vax) என்ற கோவிட் -19 தடுப்பூசியை தயாரிப்பதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹயாத் (Hayat) என்பதற்கு அரபியில் ‘வாழ்க்கை’ என்று பொருளாகும். இந்த தடுப்பூசியே அபுதாபியின் ஜி 42 மற்றும் சினோபார்ம் இடையே புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்ட பிராந்தியத்தின் முதல் உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசி ஆகும். ஹயாத்-வாக்ஸ் என்பது சினோஃபார்ம் தடுப்பூசியே ஆகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் ஐக்கிய அரபு அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்டு தற்பொழுது குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஜி 42 நிறுவனமானது ஏற்கனவே ராஸ் அல் கைமாவை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான ஜூல்ஃபருடன் (Julphar) இணைந்து கூட்டு முயற்சியாக ஹயாத்-வாக்ஸை தடுப்ப்பூசியை ஆரம்பக்கட்டமாக ஒரு மாதத்திற்கு 2 மில்லியன் தடுப்பூசிகள் என்ற அளவில் தயாரித்து வருவதாக தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்க ஜி 42 மற்றும் சினோபார்ம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தை வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் இணைந்து தொடங்கியதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

வாழ்க்கை அறிவியலுக்கான, உயிரி தொழில்நுட்பம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி ஆகிய நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட அரபு உலகின் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கலீஃபா தொழில்துறை மண்டலம் அபுதாபியில் (Khalifa Industrial Zone Abu Dhabi, Kizad) இந்த ஆண்டு ஜி 42 மற்றும் சினோபார்ம் இடையேயான கூட்டு முயற்சியின் விளைவாக ஹயாத்-வாக்ஸை தயாரிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹயாத்-வாக்ஸ் மற்றும் புதிய கூட்டுத் திட்டங்களை விரிவாகக் கூறி, ஜி 42 இன் தலைமை நிர்வாக அதிகாரி பெங் சியாவ் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுப்பூசி உற்பத்தி திறன்களை அறிமுகப்படுத்துவது கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான படியாகும். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவின் நோக்கத்தை, உண்மையாக்குவதற்கான உண்மையான கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முயற்சி நமது நாடுகளின் மக்கள்தொகை ஆரோக்கியத்தை எதிர்காலத்தில் நிரூபிப்பதற்கான ஒரு முக்கிய முன்னேற்றமாகும். உலகெங்கிலும் எங்கள் திறன்களைக் கொண்டுவருவதற்கு எங்கள் கூட்டு முயற்சி தீவிரமாக முயன்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த முதல் ‘Made in UAE’ ஹயாத்-வாக்ஸ் கோவிட் -19 தடுப்பூசி நாட்டின் 205 மருத்துவ மையங்களில் நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!