அமீரகத்தில் உள்ள வெள்ளிக்கிழமை சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து..!!
ஃபுஜைராவின் மசாஃபியில் இருக்ககூடிய வெள்ளிக்கிழமை சந்தையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஃபுஜைரா சிவில் பாதுகாப்புத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் அலி ஒபைத் அல் துனைஜி கூறுகையில், வெள்ளிக்கிழமை சந்தையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாலை 1:53 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அறிக்கை கிடைத்ததாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிவில் பாதுகாப்புத் துறையின் தீயணைப்பு குழுக்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், மசாஃபி மையத்திலிருந்து பாதுகாப்புக்குழு அனுப்பப்பட்டது என்றும் அவை, நாற்றுகள், மட்பாண்டங்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
வேகமாக பரவி வரும் தீப்பிழம்புகள் காரணமாக, அஜ்மான் சிவில் பாதுகாப்புடன் இணைந்திருந்த மனாமா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஃபுஜைரா அதிகாரிகள் உதவி கோர வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஜவுளிக்கடை, தரைவிரிப்புகள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற எரியக்கூடிய பொருட்களைக் கொண்ட கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டதை அடுத்து குளிரூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு அந்த இடம் போலீஸ் தடயவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.