அமீரக செய்திகள்

UAE: வேலை தேடுபவர்களுக்கான புதிய ‘Jobseekers’ விசா..!! விண்ணப்பிப்பது எப்படி..?? விசாவிற்கான கட்டணம் எவ்வளவு..?? அனைத்து தகவல்களும் உள்ளே..!!

நம்மில் பெரும்பாலானோர் விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் அமீரகத்தில் வேலை கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான். இனி இதே போல் வேலை தேடி அமீரகம் வரும் நபர்கள் சுற்றுலா விசாவில் வர வேண்டிய தேவையிருக்காது என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள விசா அமைப்பின் திருத்தப்பட்ட சீர்திருத்தங்களின் படி அமீரகத்திற்கு வேலை தேடி வருபவர்களுக்காகவே ஒரு புதிய விசாவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த விசாவானது ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த நிறுவனம் அல்லது எமிராட்டியின் ஸ்பான்சர் ஏதும் தேவையில்லாமல் இரண்டு, மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்க அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இந்த விசா கிடைப்பதற்கான தகுதிகள், விசாவிற்கு ஆகும் செலவு, ஆவணங்கள், விண்ணப்ப செயல்முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Jobseeker என சொல்லப்படும் வேலை தேடுவதற்கான விசா என்றால் என்ன?

கடந்த ஏப்ரல் மாதத்தில் அமீரக அமைச்சரவையானது ஒரு புதிய அமீரக விசா முறையை அறிவித்தது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விசா வகைகளில் ஒன்று வேலை தேடுபவர்களுக்கான விசாவாகும். இது அமீரகத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை இளம் திறமையாளர்களும் திறமையான நிபுணர்களும் பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி விசாவானது கீழ்க்கண்ட பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.

>> மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் (MOHRE) படி முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது திறன் நிலைகளில் வகைப்படுத்தப்பட்டவர்கள்.

>> அமீரக அரசால் வகைப்படுத்தப்பட்ட உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள்.

>> விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச கல்வி நிலை இளங்கலை பட்டம் (Bachelor’s degree) அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும்.

துபாயில் வேலை தேடும் நபர் இந்த விசாவிற்கு எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?

துபாய் எமிரேட்டில் விசா வழங்குவதற்கான செயல்முறைகளை ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாயில் விசாவிற்கு இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம். அவை:

>> GDRFA துபாய் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் – www.gdrfad.gov.ae என்ற லிங்க் சென்று விண்ணப்பிக்கலாம்

>> அமர் சென்டர் (Amer Center) மூலம் விண்ணப்பிக்கலாம். இது GDRFA சார்பாக துபாய் விசா மற்றும் ரெசிடென்ஸ் விண்ணப்பங்களை செயலாக்குகிறது.

துபாய் தவிர்த்து வேறு ஏதேனும் எமிரேட் மூலம் விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், அமீரகத்தின் அமையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் போர்ட் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் ICP மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விசா செல்லுபடி காலம் எத்தனை நாட்கள்?

இந்த விசாவானது மூன்று பிரிவில் கிடைக்கின்றது. அதன்படி இரண்டு, மூன்று மற்றும் நான்கு மாதம் என அதிகபட்சமாக 120 நாட்கள் வரை இந்த விசாவின் மூலம் அமீரகத்தில் தங்கி வேலை தேட முடியும்.

இந்த விசாவிற்கு எவ்வளவு செலவாகும்?

GDRFA துபாயின் இணையதளத்தின்படி, விசாவின் செல்லுபடி காலத்தைப் பொறுத்து கட்டணங்கள் வேறுபடும். மேலும் விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்களே தங்களின் செக்யூரிட்டி மற்றும் இன்சூரன்ஸிற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி விசாவிற்கு ஆகும் செலவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 60 நாட்கள்: 1,495 திர்ஹம்ஸ்
  • 90 நாட்கள்: 1,655 திர்ஹம்ஸ்
  • 120 நாட்கள்: 1,815 திர்ஹம்ஸ்

விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  •  கலர் புகைப்படம்
  •  பாஸ்போர்ட்டின் நகல்
  •  தகுதிச் சான்றிதழ் (சான்றளிக்கப்பட்டது)

பின்வரும் ஆவணங்களை வழங்கவும் நீங்கள் கேட்கப்படலாம். அவை

  • ஹெல்த் இன்சூரன்ஸ் (தங்கியிருக்கும் காலத்தை உள்ளடக்கியது)
  • சான்றளிக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்
  • ரிடர்ன் டிக்கெட்டின் நகல் (விருப்பமானது)
  • சொந்த நாட்டின் தேசிய அடையாள அட்டையின் நகல்.

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முறை

1. முதலில் www.gdrfad.gov.ae என்ற GDRFA இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள ‘services’ பிரிவின் கீழ் ‘entry permit’க்கான பட்டனை கிளிக் செய்ய வேண்டும்

2. ‘Entry permit’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘entry permit services’ என்பதைக் கிளிக் செய்யவும். பின் ‘New Entry Permit for Green Residence’ என்பதை கிளிக் செய்யவும்.

3. புதிய விசாக்களின் பட்டியலில் ‘Issuing Entry Permit for (Single Entry) Job Opportunity’ என்றும் இருக்கும்

4. ‘Start Service’ என்பதைக் கிளிக் செய்யவும், அதன் பிறகு login பக்கத்தில் ஏற்கெனவே  GDRFA ஆன்லைன் அக்கவுண்ட் விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழையலாம் அல்லது புதிய அக்கவுண்ட்டை உருவாக்கி உள்நுழையலாம். அதேபோல் ஏற்கனவே UAE PASS அக்கவுண்ட் இருந்தால், அதைப் பயன்படுத்தியும் உள்நுழையலாம்.

5. உள்நுழைந்ததும், GDRFA இல் உள்ள  தனிப்பட்ட டாஷ்போர்டுக்கு சென்ற பின்னர் பச்சை நிறத்தில் உள்ள ‘new application’ பட்டனை கிளிக் செய்து, மீண்டும் ஒருமுறை ‘Green residence for high-skilled workers’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

6. தனிப்பட்ட விபரங்களை உள்ளிட்டு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் 

7. பின் ‘Next’ என்பதைக் கிளிக் செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

8. இறுதியாக பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவுடன், விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு GDRFA க்கு அனுப்பப்படும்.

GDRFA இன் இணையதளத்தின்படி, விண்ணப்பத்தின் நிலையுடன் ஒரு SMS மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும். ஏதேனும் விடுபட்ட ஆவணங்கள் இருந்தால், விடுபட்ட ஆவணங்களை 30 நாட்களுக்குள் இணைக்குமாறு அறிவிக்கப்படும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், மின்னஞ்சல் மூலம் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம்.

அமர் சென்டர் மூலம் விசா விண்ணப்பித்தல்

1. அமர் சேவை மையங்களில் ஒன்றிற்குச் செல்ல வேண்டும், இந்த விங்கில் சென்று அமர் சென்டரின் முழுமையான பட்டியலை காணலாம்: https://www.gdrfad.gov.ae/en/customer-happiness-centers#

2. துபாயில் வேலை தேடும் நபர் அதற்கான விசா விண்ணப்பத்தை ரிசப்ஷனில் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

3. அடுத்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை அமர் சென்டர் ஊழியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

4. பின் சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

5. விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால் ஈமெயில் வழியாக விசாவைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!