அமீரக செய்திகள்

விரைவில் துவங்கவிருக்கும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்..!! சீசனின் தொடக்க தேதி வெளியீடு…

துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (Dubai Fitness Challenge) இந்த வருட சீசனானது எதிர்வரும் அக்டோபர் மாதம் துபாய் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் DFC வரும் அக்டோபர் 28 சனிக்கிழமையன்று அதன் ஏழாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நடைபெறும் இந்த சீசன் நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சீசனில் துபாய் திறந்தவெளி உடற்பயிற்சி கூடமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் முதன்மையான உடற்பயிற்சி சவாலானது, 30 நாட்களுக்கு தினமும் 30 நிமிட உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை செயல்படுத்த மக்களை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சேலஞ்சின் போது இடம்பெறும் எக்கச்சக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் அவர்களின் இலக்கை அடைய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முதலில் 2017 இல் தொடங்கப்பட்ட DFC என்பது ஒவ்வொரு ஆண்டும் துபாயின் வலுவான விளையாட்டு மற்றும் உடற்தகுதி உள்கட்டமைப்பை முன்னிலைப்படுத்தக்கூடிய உடற்பயிற்சி இயக்கமாகும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சீசன், சுமார் 2.2 மில்லியன் பங்கேற்பாளர்களை வரவேற்றது. அதில் துபாய் ரைடுக்காக 35,000 சைக்கிள் ஓட்டுநர்களும், துபாய் ரன்னுக்காக 193,000 ஓட்டப்பந்தய வீரர்களும் துபாயின் ஷேக் சயீத் சாலையில் திரண்டிருந்தனர்.

அதேபோல, இந்தாண்டு துபாய் ரைடு நவம்பர் 12ஆம் தேதியன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், துபாய் ரன் நவம்பர் 26 அன்று சாவலின் இறுதி நாளில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இவ்விரு நிகழ்வுகளின் போதும், ஆர்வலர்கள் துபாயின் ஷேக் சயீத் சாலையில் அமைந்துள்ள சின்னச் சின்ன அடையாளங்களைக் கடந்து சைக்கிள் ஓட்டுவதையும், நடந்து செல்வதையும் காணலாம்.

இன்னும் சில வாரங்களில், இந்த ஆண்டு DFC-நில் எவ்வாறு பதிவு செய்வது என்பது உட்பட நிகழ்வுகள், செயல்பாடுகள் மற்றும் முன்முயற்சிகளின் தேதிகள் பற்றிய கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!