UAE: தொழிலாளர்களுக்கு 3 மாதத்திற்கு மதிய இடைவேளை அறிவிப்பு..!! மீறும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம் வரை அபராதம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) வெளிப்புறங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மூன்று மாத மதிய இடைவேளையை அறிவித்துள்ளது.
இந்த முடிவின் கீழ், சூரியனின் கீழ் மற்றும் திறந்தவெளிகளில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த முடிவு ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வந்து செப்டம்பர் 15 வரை அமலில் இருக்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த முடிவின் கீழ், தினசரி வேலை நேரம், காலை, மாலை அல்லது இரண்டு ஷிப்டுகளுக்கும் சேர்த்து மொத்த வேலை நேரங்கள் எட்டு மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு தொழிலாளி அத்தகைய எட்டு மணிநேரத்தை 24 மணி நேரத்திற்குள் தாண்டினால், தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மத்திய சட்டத்தின் விதிகளின்படி, கூடுதலாக வேலை செய்ததற்காக, தொழிலாளிக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
அமைச்சகம் அறிவித்துள்ள இந்த முடிவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் அபராதம் என்றதன் அடிப்படையில், மேலும் தடையின் போது பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அதிகபட்சமாக 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும.
கூடுதலாக நிறுவனம் புரிந்த விதிமீறலைப் பொறுத்து மீறல் புரிந்த நிறுவனத்தின் கோப்பை இடைநிறுத்தம் செய்யப்படும் அல்லது அமைச்சகம் ஏற்றுக்கொண்ட MoHRE வகைப்பாடு அமைப்பில் அதன் நிலை குறைக்கப்படும்.
முடிவின் விதிமுறைகளுக்கு இணங்க, நிறுவனங்கள் தினசரி வேலை நேரங்களின் அட்டவணையை பணியிடத்தில் ஒரு முக்கிய தளத்தில் வைக்க வேண்டும், மேலும் அரபு மொழியைத் தவிர, தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் மற்ற மொழிகளும் அதில் இடம்பெற வேண்டும்.
இயந்திரங்கள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்துவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருத்தமான பாதுகாப்பு சாதனங்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும், மேலும் தொழிலாளர் சட்டம் மற்றும் அதை செயல்படுத்தும் அமைச்சின் முடிவுகளில் வழங்கப்பட்ட மற்ற அனைத்து பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று இந்த முடிவு கூறுகிறது.
மேலும், நான்கு வெவ்வேறு மொழிகளில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் கட்டணமில்லா எண்ணான 80060 ஐ அழைப்பதன் மூலம் ஏதேனும் மீறல்கள் குறித்து புகார் செய்யுமாறு சமூக உறுப்பினர்களை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.