இந்தியா, இலங்கையில் இருந்து அமீரகம் வருவதற்கான தடை ஆகஸ்ட் 7 க்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம்..!! விமான நிறுவனம் தகவல்..!!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமான சேவைகளுக்கான தடையை ஆகஸ்ட் 7, 2021 க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று அபுதாபியை தளமாகக் கொண்ட எத்திஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஆகஸ்ட் 7 வரை இந்தியா மற்றும் அதன் துணைக் கண்டத்திலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமான சேவைகள் நிறுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது. பின்னர் இந்த தடையானது மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படும் என அறிவித்தது.

எதிஹாட் நிறுவனம் இது குறித்து கூறுகையில் “சமீபத்திய ஐக்கிய அரபு அமீரக அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவை ஆகஸ்ட் 7, 2021 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது அரசாங்க உத்தரவுகளுக்கு இணங்க இந்த தேதி நீட்டிக்கப்படலாம்” என தற்பொழுது தெரிவித்துள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனமும், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் விமான சேவைகளை வரும் ஆகஸ்ட் 7 வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சரக்கு விமானங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இரு திசைகளிலும் தொடர்ந்து இயக்கப்படும் என்று எத்திஹாட் கூறியுள்ளது.

அத்துடன் பயணத்தடையால் பாதிக்கப்பட்ட பயணிகளுடன் இது தொடர்பான புதுப்பித்தல்கள் குறித்து தெரியப்படுத்த தொடர்பில் இருந்து வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.