அமீரக செய்திகள்

UAE: பாஸ்போர்ட் இல்லாமலேயே ஏர்போர்ட் செயல்முறையை சில நொடிகளில் முடிக்கலாம்..!! துபாய் விமான நிலையத்தில் உள்ள ஸ்மார்ட் கேட்களை பயன்படுத்துவது எப்படி..???

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) டெர்மினல் 3-இல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணிகளின் முகங்களே அவர்களது பாஸ்போர்ட்டாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. அதாவது பயணிகள் தங்கள் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தாமல் முகம் மற்றும் கருவிழி (Iris) அங்கீகாரத்தின் மூலம் இமிகிரேஷன் முறைகளை சரிபார்த்து செல்லும் ‘ஸ்மார்ட் டிராவல்’ அமைப்பை கடந்த பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு DXB அறிமுகம் செய்துள்ளது.

DXB இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, துபாய்க்கு வந்திறங்கும் மற்றும் துபாயில் இருந்து புறப்படும் பயணிகள், தொடர்பு இல்லாத செயல்முறையைக் கொண்டிருக்கும் “மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட்ஸ்” மூலம் நொடிகளில் ஏர்போர்ட் செயல்முறைகளை முடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன்கீழ் துபாயின் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) கருவிழி மற்றும் பயோமெட்ரிக்ஸ் தகவல் மூலம் பயணிகளை சரிபார்ப்பு செய்வதாக தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்தும் முறை:

>> DXB இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, ஸ்மார்ட் கேட்ஸுக்குப் பதிவு செய்த பயணிகள், தங்களின் ஆவணத்தை ஸ்கேன் செய்யத் தேவையில்லை. மாறாக பச்சை விளக்குக்கு கீழ் உள்ள கேமராவைப் பார்ப்பதன் மூலம் நொடிகளில் இமிகிரேஷன் செயல்முறையை முடித்து செல்லலாம்.

>> அத்துடன், முகக்கவசம், கண்ணாடிகள், மற்றும் தொப்பிகள் போன்ற முகத்தை மறைக்கும் எதையும் பயணிகள் அகற்ற வேண்டும். மேலும், பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்வது சிறந்தது.

>> அதேவேளை, ஸ்மார்ட் கேட் வழியாக செல்ல முடியாத போது, அதன் பின்னால் அமைந்துள்ள இமிகிரேஷன் கவுண்டருக்கு நீங்கள் செல்லலாம் என்று GDRFA இணையதளம் கூறியுள்ளது.

கட்டணம் உள்ளதா?

இதனை சுயசேவையாக பயன்படுத்த கட்டணம் கிடையாது.

ஸ்மார்ட் கேட்களை யாரெல்லாம் பயன்படுத்தலாம் மற்றும்  யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது?

>> அமீரக குடிமக்கள், GCC நாட்டவர்கள், வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பயோமெட்ரிக் பாஸ்போர்ட் உள்ள பயணிகளில் வருகையின் போது விசா பெற தகுதியுடையவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

>> மாற்று திறனாளிகள், பெரிய ஸ்ட்ரோலர்களைக் கொண்ட பயணிகள், குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட அல்லது 1.2 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள பயணிகள் ஸ்மார்ட் கேட்களை பயன்படுத்தக்கூடாது.

மேலும் GDRFA இன் படி, பயணிகளில் பின்வரும்  பிரிவினரும் ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்த முடியாது:

  • ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருந்த முன் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள்.
  • புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் மற்றும்/அல்லது தேசியம் கொண்ட முன் பதிவு செய்த பயணிகள்.

பயணிகள் எவ்வாறு பதிவு செய்வது?

சமீபத்தில் வந்த பயணிகள் இமிகிரேஷன் டச்பாயிண்டிற்குள் நுழையும்போது பதிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!