Uncategorized

உலகிலேயே அதிவேகமாக செல்லும் ஆம்புலன்ஸை அறிமுகம் செய்த துபாய்.. மணிக்கு 400 கி.மீ வேகம்.. அப்போ விலை..??

சாலைகளில் அதிவேகமாக செல்ல கூடிய விலையுயர்ந்த சூப்பர்கார்களையும் மற்றும் லக்ஸரி கார்களையும் அதிகளவில் காவல்துறைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் துபாயில், தற்போது உலகிலேயே அதிவேகமாக செல்ல கூடிய மற்றும் விலையுயர்ந்த “ஹைப்பர்ஸ்போர்ட் ரெஸ்பாண்டர்” எனும் ஆம்புலன்ஸ் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை, ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்போ 2020 துபாயில் இன்று நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் துபாய் கார்ப்பரேஷன் ஃபார் ஆம்புலன்ஸ் சர்வீசஸ் (DCAS) துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிவேக ஆம்புலன்ஸ் ரெஸ்பாண்டர், ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிக்கப்பட்ட, துபாயை தளமாகக் கொண்ட W மோட்டார்ஸின் லைகான் ஹைப்பர்ஸ்போர்ட் சூப்பர் கார் ஆகும்.

உலகில் மொத்தமாகவே இருக்க கூடிய ஏழு லைகான் ஹைப்பர்ஸ்போர்ட் கார்களில் ஒன்றான இந்த ‘ஹைப்பர்ஸ்போர்ட் ரெஸ்பாண்டர்’ ஆனது 0 முதல் 100km/h வரையிலான தூரத்தை வெறும் 2.8 வினாடிகளில் கடக்கும் திறன் கொண்டது. மேலும் இரட்டை டர்போசார்ஜ் செய்யப்பட்ட போர்ஸ்சே கார் நிறுவனத்தின் இன்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் மணிக்கு 400km/h வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

மேலும் இந்த காரில், வரிசையாக 440 வைரங்கள் பொருத்தப்பட்டுள்ள முகப்பு LED ஹெட்லைட்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உட்புற கூரையும் கொடுக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அதிவேகமாக செல்ல கூடிய இந்த ஹைப்பர்ஸ்போர்ட் ரெஸ்பாண்டரின் விலை 13 மில்லியன் திர்ஹம்ஸ் (இந்திய ரூபாய் மதிப்பில் 2.6 கோடி) என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஹைப்பர்ஸ்போர்ட் ஆம்புலன்ஸ் ரெஸ்பாண்டர் அறிமுகம் குறித்து துபாய் கார்ப்பரேஷன் ஃபார் ஆம்புலன்ஸ் சர்வீசஸின் (DCAS) தலைமை நிர்வாக அதிகாரி கலீஃபா பின் தர்ராய் கூறுகையில், துபாய் தனித்துவமான மற்றும் உலகில் முதன்மையான அனைத்திற்கும் ஏற்றவாறு மாறியுள்ளது. புதுமைத் துறையில் உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக துபாயின் தனித்துவமான நிலையை ‘ஹைப்பர்ஸ்போர்ட் ரெஸ்பாண்டர் அறிமுகம் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காரின் வேகம் மற்றும் திறன்கள் அவசர காலங்களில் செயல்படும் நேரத்தை கணிசமாகக் குறைக்கும் மற்றும் சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகின் அதிவேக மற்றும் விலையுயர்ந்த இந்த ஆம்புலன்ஸ் ரெஸ்பாண்டர் தற்போது, உலகின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வான எக்ஸ்போ 2020 துபாய் வரும் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய ஈர்ப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை லைக்கான் ஹைப்பர்ஸ்போர்ட் கார் முதன் முதலாக ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 திரைப்படத்தில் தோன்றியதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!