அமீரக செய்திகள்

துபாய்: இ-ஸ்கூட்டருக்கான ‘இலவச ஓட்டுநர் அனுமதி’ பெற ஏப்ரல் 28 முதல் விண்ணப்பிக்கலாம்..RTA அறிவிப்பு..!!

துபாயில் இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் அதற்கான ஓட்டுநர் அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாயம் என சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஏப்ரல் 28 ம் தேதி முதல் அதற்கான இலவச ஓட்டுநர் அனுமதியை பெறுவதற்கு இ-ஸ்கூட்டர் பயன்படுத்துபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

துபாயின் குறிப்பிட்ட தெருக்களில் இ-ஸ்கூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கும், சைக்கிள் பாதைகள் அல்லது நடைபாதைகள் தவிர மற்ற பிற இடங்களில் இ-ஸ்கூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஓட்டுநர் அனுமதி கட்டாயம் என்று RTA கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. மேலும் இந்த அனுமதியை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் RTA இணையதளத்தில் உள்ள விழிப்புணர்வு பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் RTA தெரிவித்திருந்தது.

RTA வின் படி, இ-ஸ்கூட்டர் ஓட்டுநர் அனுமதி பெறுவதற்கான பயிற்சி வகுப்பில் இ-ஸ்கூட்டரைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட பகுதிகள் தவிர, ஸ்கூட்டர்களின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் தரநிலைகள் மற்றும் பயனர்களின் கடமைகள் பற்றிய பாடங்களும், அத்துடன் போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் ஸ்கூட்டர் தொடர்பான அடையாளங்களின் வரையறைகளும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

RTA வின் இணையதளத்தில் இதற்காகவே பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மின்னணு தளத்தின் மூலம் பொதுமக்கள் இலவச ஓட்டுநர் அனுமதிகளைப் பேர் முடியும். எனினும் துபாய் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, இ-ஸ்கூட்டரைப் பயன்படுத்துபவர் 16 வயதுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே துபாயில் ஓட்டுநர் அனுமதி பெறாமல் இ-ஸ்கூட்டரைப் பயன்படுத்துவது இனிமேல் போக்குவரத்து விதிமீறலாக கருதப்பட்டு, அதன் ஓட்டுநருக்கு சட்டத்தின்படி 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். எனினும், செல்லுபடியாகும் UAE ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கும், சர்வதேச ஓட்டுநர் உரிமம் அல்லது மோட்டார் சைக்கிள் உரிமம் உள்ளவர்களுக்கும் இ-ஸ்கூட்டர் பயன்படுத்துவதற்கான அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!