லைஃப் ஸ்டைல்

UAE: நெற்பயிரின் நடுவே ஒரு ஓலைக் குடிசை.. பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிய இந்தியர்..

நெற்பயிரின் நடுவில் ஒரு ஓலைக் குடில். மேலிருந்து கீழ் விழும் ஒரு நீர்வீழ்ச்சியுடன் ஒரு மேட்டின் மீது ஒரு பழமையான கூடாரம். பாரம்பரிய மரப் படகு, மீன் மற்றும் நீர் அல்லிகள் கொண்ட பெரிய குளம். ஒரு வயலில் விளையும் பல்வேறு காய்கறிகள் மற்றும் அதன் மையத்தில் தண்ணீர் கொண்ட கிணறு. இந்த பசுமையான இடம் இந்தியாவில் என்றால் ஆச்சரியமில்லை. ஆனால், இதுவே ஒரு பாலைவனப்பகுதி என்றால் நம்பமுடியவில்லைதான். சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியப்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஷார்ஜாவில் தனது கனவு திட்டத்தை நிறைவேற்றி அதற்கு கிரீன் ஹெவன் (green heaven) என்ற பெயரும் வைத்து இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் குருவாயூர்.

ஷார்ஜாவில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை எழில் மிகுந்து காணப்படும் இந்த அழகிய இடம், ​​கேரளாவின் கிராமப்புற சூழலை கொண்டு வர எண்ணி அமைக்கப்பட்டதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் விவசாயத் துறையில் கின்னஸ் உலக சாதனை உட்பட பல சாதனைகளுடன் இங்குள்ள மிகவும் பாராட்டப்பட்ட இந்திய விவசாய ஆர்வலரான குருவாயூர், தனது தாயகமான கேரளாவில் உள்ள பசுமையான கிராமத்தை அமீரகத்திலும் உணர வேண்டி இதனை அமைத்துள்ளார்.

கிராமப்புற இந்தியாவின் சமூக கலாச்சார வாழ்க்கை

“நான் இங்கு ஷார்ஜாவில் ஒரு மினி பசுமை கிராமத்தை உருவாக்கி அதை எனது புதிய வாழ்வாதாரமாக மாற்ற விரும்பினேன்,” என்று பொறியாளராக இருந்து ஆர்கானிக் விவசாயியாக மாறிய சுதீஷ் கூறியுள்ளார்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

மேலும், “கிராமப்புற இந்தியாவின், குறிப்பாக கேரளாவின் சமூக கலாச்சார வாழ்வில் நெல் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனை அமீரகத்திலும் செய்யலாம் என்று நிரூபித்தேன். இந்த முறை நான் அதை சற்று பெரிய நிலத்தில் செய்கிறேன்”என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் வாழ்ந்த ஒரு வில்லாவின் கொல்லைப்புறத்தில் பாரம்பரியமாக அரிசி விவசாயம் செய்ததே ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலில் விவசாயம் செய்தது என கூறுகிறார்.

குருவாயூர் தனது கனவு திட்டத்தை நனவாக்க மூன்று மாதங்களுக்கு முன்பு எமிராட்டி உரிமையாளரிடம் இருந்து 20 ஆண்டு குத்தகைக்கு பண்ணையை எடுத்ததாக கூறியுள்ளார். அத்துடன் ஷார்ஜாவின் அல் ஜுபைர் பகுதியில் அவரது புதிய திட்டத்தில் பாலைவன மண்ணை நெல் விளையும் விவசாய மண்ணாக மாற்ற மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

பண்ணையை ஒட்டிய பெரிய மரங்கள் மற்றும் சில விலங்குகள் ஏற்கனவே அங்கே இருந்தபோதிலும், குருவாயூரின் எண்ணப்படி, வாங்கிய நிலத்தின் மையமத்தில் உள்ள தரிசு நிலத்தை கேரளா மாதிரி கிராமமாக மாற்றுவதாக இருந்ததால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்த இடத்தில் ஒரு பழங்கால டீக்கடை, பழங்கால மிட்டாய்கள் விற்கும் ஒரு குட்டிக் கடை மற்றும் கப்பி, கயிறு மற்றும் வாளியைப் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கும் கிணறு ஆகியவை உள்ளன. மேலும் வெளிப்பகுதியில், கான்கிரீட் மற்றும் செங்கல் உறை கொண்ட கிணறு வடிவமைப்பானது உண்மையிலேயே தோண்டப்பட்ட ஒரு கிணறு போன்றே உள்ளது. இந்த உணர்வைத் தருவதற்காக அதில் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஓமானில் உள்ள சலாலாவில் இருந்து அனைத்து நெய்யப்பட்ட தேங்காய் பனை ஓலைகளால் இந்த இடத்தில் வேயப்பட்ட குடிசை, ஒரு பெரிய அறை மற்றும் அட்டாச்டு பாத்ரூம் கொண்டது. இது பற்றி அவர் கூறுகையில் “குடிசைக்கு பாரம்பரிய உணர்வைக் கொடுக்க நாங்கள் சிவப்பு ஆக்சைடு தரையைத் தேர்ந்தெடுத்தோம்,” என்று கூறியுள்ளார்.

பழங்கால பொருட்கள்

கேரளாவில் பிரபலமாக இருந்த ‘சாருகசேரா’ (மர ராக்கிங் நாற்காலி), அம்மி, உலக்கை, உரல், முறம் உட்பட கடந்த காலத்தின் பல விஷயங்களை பார்வையாளர்கள் இங்கே காணலாம்.  

கூடாரம்

வயலில் முக்கியமாக சோலார் விளக்குகள் இயங்கும் அதே வேளையில், பாரம்பரிய மண்ணெண்ணெய் விளக்குகளின் வடிவில் உள்ள விளக்குகள் கடைகளிலும் குடிசையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெளிச்சத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அழகிய நிலப்பரப்பில் சுமார் 30 வகையான காய்கறிகள் மற்றும் மூலிகைகள் பயிரிடப்படுகின்றன. இந்த பசுமையான பண்ணையில் ஏராளமான பறவைகளும் காணப்படுகின்றன.

குளத்தை உருவாக்க நிலத்தைத் தோண்டும் போதும் வயலை சமன் செய்யும் போதும் சேர்ந்த மணல் குவியலை கண்டபோதுதான் கூடாரம் அமைக்கும் யோசனை வந்ததாக கூறுகிறார். இதனை பற்றி விவரிக்கையில், “நான் மணலை நல்ல விஷயத்திற்கு மீண்டும் பயன்படுத்த விரும்பினேன். எனவே, இந்த சிறிய மலையை உருவாக்கி அருவி போன்ற ஒன்றை அமைத்தோம். மேலே இந்த கூடாரத்தை வடிவமைத்தோம். இது புகைப்டங்களை எடுப்பதற்கு இது ஒரு சிறந்த இடமாகும்” என அவர் கூறியுள்ளார்.

கிரீன் ஹெவன் ஃபார்ம் மற்றும் கேம்பிங் ஏற்கனவே பல பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இவை இயங்கும் நேரங்கள் மற்றும் கட்டணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இயக்க நேரம் மற்றும் கட்டணங்கள்:

இந்த பண்ணை பார்வையாளர்களுக்காக காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும்.

பண்ணைக்கான நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு 25 திர்ஹம்ஸ், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 15 திர்ஹம்ஸ்.

குடிசையில் முகாமிடுதல்: 699 திர்ஹம் (காலை உணவு மற்றும் பார்பிக்யூ வசதியுடன்).

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!