அமீரக செய்திகள்

வளைகுடா நாடுகளில் உணவு பொருள்களின் விலை எதிர்காலத்தில் உயர வாய்ப்பு… உணவு சங்கிலி சீர்குலைவால் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வறிக்கை வெளியீடு

உணவு விநியோக சங்கிலியின் சீர்குலைவுகளால் வளைகுடா நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் உணவுகளில் உலகளாவிய நாடுகளின் தாக்கத்தை பற்றிய ஆராய்ச்சியை குவைத் ஃபைனான்சியல் சென்டரின் ஆராய்ச்சிப் பிரிவான மார்மோரின் மேற்கொண்டது.

இந்த அறிக்கையின்படி, விவசாய பொருள்களின் இறக்குமதி மற்ற உலக நாடுகளை சார்ந்திருக்கும் நிலையில் எதிர்காலத்தில் உணவு விநியோக சங்கிலி தடையின் மூலம் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறியுள்ளன. எனவே தொடர்ச்சியான உணவு விநியோகத்தை உறுதிப்படுத்த போதுமான அளவு நிதி தாங்கல்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டினை பொருத்தவரை, நாட்டின் உணவுத் தேவையில் 95% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஜனவரி 2022 இல், நாட்டிற்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் கப்பல் செலவுகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது டன் ஒன்றுக்கு $1,400 இலிருந்து $14,000 ஆக உயர்ந்திருப்பதால் மார்ச் 2023 இல் உணவுப் பணவீக்கம் 7.46% ஆகப் பதிவாகியுள்ளது, இது முந்தைய மாதத்தில் இதே ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட தாக்கங்களான, COVID-19, ரஷ்யா-உக்ரைன் மோதல், அதிக சரக்கு செலவுகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளன. 2022 ஆம் ஆண்டில், வெளியிடப்பட்ட உணவு நெருக்கடி குறித்த உலகளாவிய அறிக்கையின் படி 2019 ஆம் ஆண்டில் 135 மில்லியனாக இருந்த உணவு பற்றாக்குறை தற்பொழுது 205 மில்லியன் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் தாக்குதலின் காரணமாக எண்ணெய் வித்துக்களின் ஏற்றுமதி குறைந்ததால் தற்காலிக சரிவு ஏற்பட்டாலும் அக்டோபர் 2019 முதல் மெதுவாக அதிகரிக்க தொடங்கிய உணவுப் பொருட்களின் விலைகள் மார்ச் 2022 ஆம் ஆண்டு உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உணவு பொருள்களுக்காக வளைகுடா நாடுகள் இறக்குமதியை நம்பியிருந்தாலும், 2007-2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உணவு நெருக்கடிக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட நீண்ட கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை பராமரித்து வருகின்றன என்று அறிக்கை மேலும் கூறியது.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் தங்கள் உணவுப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்கின்றன, இதில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தேசிய உணவு உத்திகளை உருவாக்குதல், இறக்குமதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல், கழிவுகளை குறைத்தல் மற்றும் இருப்பு திறனை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, இந்த நாடுகள் செங்குத்து விவசாயம் (vertical agriculture) மற்றும் டிஜிட்டல் கருவிகள் போன்ற வேளாண் தொழில்நுட்பத்தை தழுவி, விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்தவும் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கின்றன. விவசாயத்திற்கு சாதகமற்ற காலநிலை நிலைமைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வெளிநாடுகளில் உள்ள விவசாய நிலங்களில் முதலீடு செய்துள்ளன.

எனவே, எதிர்காலத்தில் உணவு சங்கிலியில் சீர்குலைவு ஏற்பட்டாலும் அதனை மேற்கொள்வதற்கு எல்லா வகையிலும் வளைகுடா நாடுகள் தயாராக இருக்கின்றன என்பதை ஏற்கனவே திட்டவட்டமாக வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!