அமீரக செய்திகள்

ஃபெடரல் சட்டத்தை திருத்திய அமீரகம்.. வாடகைத் தாய் முறைக்கு அனுமதி.. யாருக்கெல்லாம் பொருந்தும்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக திருத்தப்பட்ட ஃபெடரல் சட்டம், வாடகைத் தாய் முறை (surrogacy) மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மக்களை அனுமதிப்பது தெரியவந்துள்ளது, இது முன்பு நாட்டில் அனுமதிக்கப்படாமல் இருந்தது. வாடகைத் தாய்மை என்பது ஒரு பெண், ஒரு தம்பதி அல்லது தனிநபருக்கு ஒரு குழந்தையை கருவில் சுமந்து பெற்றுக் கொடுக்க ஒப்புக் கொள்ளும் ஒரு செயல்முறையாகும்.

சட்ட வல்லுனர்களின் கூற்றுப்படி, அமீரகத்தின் ஃபெடரல் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திருத்தங்கள், இனப்பெருக்க நுட்பங்களுக்கான நாட்டின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

சமீபத்திய சட்ட திருத்தங்களில், IVF போன்ற மருத்துவ உதவியுடனான இனப்பெருக்க நுட்பங்களை திருமணச் சான்றிதழ் இல்லாமல் முஸ்லீம் அல்லாத தரப்பினருக்கு விரிவுபடுத்துவது, வாடகைத் தாய்க்கு அனுமதிப்பது மற்றும் திருமணமாகாத தம்பதிகளும் கருத்தரித்தல் மற்றும் கருப்பதித்தல் (fertilisations and implantation) செயல்முறைகளை அணுக அனுமதிப்பது ஆகியவை அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட சட்டம் கூறுவது என்ன?

திருமணமாகாத மற்றும் முஸ்லீம் அல்லாத தம்பதிகள் கட்டுப்பாட்டாளர்களுக்கு விண்ணப்பித்த பிறகு இப்போது வாடகைத் தாய் உட்பட நாட்டிற்குள் சட்டப்பூர்வமான உதவி கருத்தரித்தல் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் சேவைகள் எதையும் அணுகலாம்.

மேலும், இந்த செயல்முறையை ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் கண்காணிப்பார்கள். அதாவது, இத்தகைய சேவைகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள இது தொடர்பான துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது, மேலும் இது தொடர்புடைய கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்கள் சம்பந்தப்பட்ட தம்பதியரிடம் இருந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் விவரிக்கையில், அமீரகத்தில் இன்னும் கருமுட்டை மற்றும் விந்தணு வங்கிகள் சட்டவிரோதமானவைதான். குறிப்பாக வாடகைத் தாய் முறையை அனுமதிக்கும் புதிய சட்டம் எதுவும் இல்லை, ஆனால் வாடகைத் தாய் முறையைத் தடுக்கும் பழைய சட்டத்தின் உரை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

சட்டம் யாருக்கு பொருந்தும்?

இந்த சட்டம் எமிராட்டியர்கள், பிற நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் குடியிருப்பாளர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும். எவ்வாறாயினும், புதிய சட்டத்தின் பிரிவு 8(2)ன் கீழ் இது தொடர்புடைய கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பிப்பவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால், முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமே இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம்.

அதுவே, இந்த சேவைக்கு விண்ணப்பிப்பவர்களில் கணவன் அல்லது மணைவி அல்லது தம்பதிகள் இருவரும் முஸ்லீம் குடியிருப்பாளராக இருந்தால், வாடகை தாய் முறையில் குழந்தை பெற அனுமதிக்கும் இந்த சேவைகளை அணுகுவதற்கு திருமணம் அவசியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!