அமீரக செய்திகள்

தொழிலாளர்கள் கட்டுமானத் தளங்களில் தங்குவதற்குத் தடை..!! அதிகாரிகள் வலியுறுத்தல்..!!

அபுதாபி முனிசிபாலிட்டி கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்கள் தங்குவதைத் தடைசெய்யும் விதியை அமல்படுத்துவதற்கான தனது முடிவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதாவது, இந்தத் தடையானது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கட்டுமான தளங்களில் தொழிலாளர்கள் தங்குவது அவர்களுக்கு முறையான பாதுகாப்பை தராது என்றும் இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபி எமிரேட்டில் வீட்டுவசதிக்குத் தேவையான தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆய்வாளர்கள் கட்டுமானத் தளங்கள் மற்றும் தொழிலாளர் தங்குமிடங்களின் ஆன்-சைட் சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அபுதாபி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வதற்காக சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவது குறித்து கல்வி கற்பிப்பதே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின்  நோக்கமாகும்.

மேலும், பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அபுதாபி முனிசிபாலிட்டியின் சமூக ஊடக சேனல்கள் மூலம் விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது கட்டுமானத் தளங்களில் தங்கும் தொழிலாளர்களின் எதிர்மறையான விளைவுகளையும், அத்தகைய செயல்களின் சட்ட மற்றும் தண்டனைக்குரிய விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக, ஒப்பந்த நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் கட்டுமானத் தளங்களுக்குப் பொறுப்பானவர்கள் ஆகியோர் அவர்களது தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் ஒழுக்கமான மற்றும் பொருத்தமான தங்குமிடங்களை வழங்குமாறு ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, பிரச்சாரத்தின் போதும் தொழிலாளர்களின் வீட்டுவசதிக்கு பொறுப்பானவர்களிடம், தொழிலாளர் தங்குமிடங்களில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தேவைகளை கவனத்தில் கொள்ளவும், கடைபிடிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அபுதாபியின் நாகரீக மற்றும் அழகியல் தோற்றத்தை பராமரிக்கவும், தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஆண்டு முழுவதும் இதுபோன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்த உறுதிபூண்டுள்ளதாக அபுதாபி முனிசிபாலிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!