அமீரக செய்திகள்

51-வது அமீரக தேசிய தினம்: புதிய 1,000 திர்ஹம்ஸ் நோட்டை அறிமுகப்படுத்திய அமீரக மத்திய வங்கி..!!

அமீரகத்தின் 51வது தேசிய தினத்தை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கியானது (CBUAE) இன்று (வெள்ளிக்கிழமை) புதிய 1,000 திர்ஹம்ஸ் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய திர்ஹம் நோட்டில் நாட்டின் விண்வெளி ஆய்வுகள் மற்றும் சுத்தமான ஆற்றல் உள்ளிட்ட சமீபத்திய சாதனைகள் இடம்பெற்றுள்ளன.

அமீரக தந்தையான ஷேக் சையத், ஹோப் ப்ரோப் (Hope Probe) மற்றும் பராக்கா அணுமின் நிலையம் (Barakah Nuclear Plant) ஆகியவற்றின் படங்களுடன், புதிய 1,000 திர்ஹம் நோட்டு சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய மைல்கற்களை மட்டுமல்லாமல், அவற்றை நிகழச் செய்த மகத்தான தொலைநோக்கு பார்வையையும் இது குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திர்ஹம்ஸ் நோட்டு 2023 முதல் பாதியில் மத்திய வங்கி கிளைகள் மற்றும் ATMகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய 1,000 திர்ஹம் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டின் முன்புறம் விண்வெளி கருப்பொருள் கொண்டு  நடுவில் ஐக்கிய அரபு அமீரக ஸ்தாபக தந்தையின் படத்தைக் கொண்டுள்ளது. அவரது படத்திற்கு அடுத்ததாக ஒரு விண்வெளி விண்கலம் மற்றும் ஹோப் ப்ரோப் அதற்கு மேலே உள்ளது.

இந்த வடிவமைப்பு, CBUAE இன் கூற்றுப்படி, 1976 இல் ஷேக் சையத் மற்றும் நாசாவின் முன்னோடியாளர்களுக்கு இடையிலான சந்திப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது படத்தின் இடதுபுறத்தில், 2021-ல் நடந்த வரலாற்றுப் பயணத்தைக் குறிப்பிடும் ‘Emirates Mission to Explore Mars – the Hope Probe’ என்ற வார்த்தைகள் உள்ளன.

இதில் இடம்பெற்றுள்ள ஒரு விண்வெளி வீரரின் படம் பாதுகாப்பு அடையாளமாக செயல்படுகிறது மற்றும் இந்த படம் திர்ஹம் நோட்டின் இருபுறமும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது விண்வெளியை அடைந்த முதல் எமிராட்டி விண்வெளி வீரரைக் குறிக்கிறது. திர்ஹம் நோட்டின் பின்புறம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றொரு உலகளாவிய சாதனையான அபுதாபியில் உள்ள பராக்கா அணுசக்தி நிலையம் இடம்பெற்றுள்ளது.

நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான CBUAE இன் முயற்சிகளுக்கு ஏற்ப, இந்த திர்ஹம் நோட்டானது மறுசுழற்சி செய்யக்கூடிய பாலிமர் பொருட்களால் ஆனது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பாரம்பரிய காகித திர்ஹம் நோட்டுகளை விட நீடித்து நிலைத்திருக்கும், எனவே இவை நீண்ட காலம் புழக்கத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

புதிய திர்ஹம் நோட்டானது பழுப்பு நிறத்தையும் ரூபாய் நோட்டின் மையத்தில் நீல நிற அடையாளங்கள் மற்றும் மேம்பட்ட இன்டாக்லியோ பிரிண்டிங் நுட்பங்களைப் (intaglio printing techniques) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வரைபடங்களைக் கொண்டிருக்கும் என்றும் இதில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CBUAE ஆனது GCC மற்றும் Mena பிராந்தியங்களிலேயே புதிய திர்ஹம் நோட்டு வெளியீட்டில் மிகப்பெரிய பல வண்ண KINEGRAM® எனும் முறையை (multi-coloured KINEGRAM® surface applied foil stripe) உபயோகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பமானது கள்ளநோட்டு உருவாக்குவதற்கு எதிராக செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்வையற்ற நபர்கள் திர்ஹம் நோட்டின் மதிப்பை அடையாளம் காண உதவும் வகையில் பிரெய்லி எழுத்து முறையின் முக்கிய குறியீடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!