துபாய்: DSF நிறைவடைவதை முன்னிட்டு நான்கு நாட்கள் நடைபெறும் சிறப்பு வான வேடிக்கை நிகழ்ச்சி.. எங்கே..??

துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 28வது சீசனானது கடந்த டிசம்பர் மாதம் துவங்கிய நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது. இதனை முன்னிட்டு ஃபெஸ்டிவலின் நிறைவைக் குறிக்கும் விதமாக, பாம் ஜூமேராவில் இருக்கும் “The Pointe”-ல், பல்வேறு வண்ணங்களால் பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 25 முதல் 28 வரை தினமும் இரவு 9 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
உலகின் மிக நீண்ட சில்லறை விற்பனை திருவிழாக்களில் ஒன்றான DSF டிசம்பர் 15 அன்று துவங்கி ஜனவரி 29 வரை என 46 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 3,500 அவுட்லெட்டுகளில் 800-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த DSF-ன் இறுதி விற்பனை இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. இதில் லைஃப்ஸ்டைல் பொருட்கள், குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பலவற்றில் 25 முதல் 90 சதவீதம் வரையிலான சலுகைகளை ஷாப்பிங் செய்பவர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.