அமீரக செய்திகள்

வருடத்தில் 157 நாட்கள் வார விடுமுறை.. ஆனாலும் உற்பத்தித்திறன் 88% அதிகரிப்பு.. கெத்து காட்டும் ஷார்ஜா.. தொழிலாளர்கள் மகிழ்ச்சி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்ப காலம் முதலே கல்வித்துறை, பணியிடங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்துத் துறைகளுக்கும் வார இறுதி விடுமுறை நாட்களாக வெள்ளிக்கிழமையே இருந்து வந்தது. ஆனால் அதனை மாற்றி உலகின் மற்ற நாடுகளைப் போலவே கடந்த வருட ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை வார இறுதி விடுமுறை நாளாக அமீரக அரசு அறிவித்தது.

இதில் முன்னர் வெள்ளி, சனி என இரு நாட்கள் விடுமுறையைக் கண்டவர்கள் கடந்த வருடம் முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறையை பெற்று வருகின்றனர். அதிலும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வெள்ளிக்கிழமை அரை நாள் விடுமுறையுடன் மொத்தம் இரண்டரை நாட்கள் வார விடுமுறையை பெற்று வருகின்றனர்.

அதுவே ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா எமிரேட் மட்டும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை நாட்கள் என அறிவித்து மூன்று நாட்கள் விடுமுறையை வழங்கியுள்ளது. ஷார்ஜாவில் இருக்கும் ஒரு சில தனியார் துறை நிறுவனங்களும் இந்த முறையை அமல்படுத்தியுள்ளனர். இதனால், ஷார்ஜா அரசு ஊழியர்கள் கடந்த ஆண்டு வார இறுதி விடுமுறையாக மொத்தம் 157 நாட்களை அனுபவித்தனர் என கூறப்பட்டுள்ளது.

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடைப்பது தனக்கு போதவில்லை என்றும் சில சமயங்களில் அந்த ஒரு நாளிலும் கூடுதல் நேரம் வேலை செய்பவர்களுக்கும் இந்த தகவலானது ஆச்சரியத்தையும் ஏக்கத்தையும் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.

இது குறித்து செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த புதிய வேலை நாட்களுக்கான நடவடிக்கை பலனளித்துள்ளதாக ஷார்ஜா தெரிவித்துள்ளது. ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இந்த புதிய விடுமுறை நாட்கள் மாற்றத்தின் விளைவாக அதிக வேலை திருப்தி (90 சதவீதம்) மற்றும் அதிகளவு உற்பத்தித்திறன் (88 சதவீதம்) கூடுதலாக, வாடிக்கையாளர்கள் 94 சதவீதம் சேவை திருப்தி விகிதத்தை வழங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா அரசாங்க ஊழியர்கள் இது பற்றி தெரிவிக்கையில், மூன்று நாட்கள் வார இறுதி விடுமுறையானது வேலை-வாழ்க்கைச் சமநிலையை அடைய உதவியது என்றும் இது பொழுதுபோக்குகள் மற்றும் தனிப்பட்ட வணிகத் திட்டங்களையும் குடும்ப உறவுகளை மேம்படுத்தவும் உதவியது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வாரத்தின் மூன்று நாட்கள் விடுமுறை வேலை தொடர்பான மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவியதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த குறுகிய வேலை நாட்கள் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் குறைவான போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2021 உடன் ஒப்பிடும்போது 2022 முதல் மூன்று மாதங்களில் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் இறப்புகள் 40 சதவீதம் குறைந்துள்ளன என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த வேலை நாட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி அதிகாரப்பூர்வ மதிப்பீட்டில் ஊழியர்களின் வருகை விகிதம் 74 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் அதே சமயம் நோய்வாய்ப்பட்டு எடுக்கக்கூடிய விடுப்பு விகிதம் 46 சதவீதம் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் உத்தியோகபூர்வ வேலை நேரத்திற்கு வெளியே மின்-அரசு சேவைகளை (e-government services) வழங்கும் விகிதத்தில் 61 சதவீதம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் வேலை செயல்திறனில் 90 சதவீதம் முன்னேற்றம் காணப்பட்டதாகவும், 91 சதவீத ஊழியர்கள் அரசாங்கம் புதிய முறையை அமல்படுத்திய பிறகு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். சுமார் 87 சதவீதம் பேர் இந்த நடவடிக்கை மனநலத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 85 சதவீதம் பேர் இந்த அமைப்பு வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த உதவுகிறது என்றும், 96 சதவீதம் பேர் தங்களது 3 நாள் வார இறுதி நாட்களை அதிகம் ரசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 62 சதவீத ஊழியர்கள் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்குக்காக கூடுதல் நேரத்தை பயன்படுத்தியதாக கூறியுள்ளனர்.

இவ்வளவு பலன்கள் கிடைத்துள்ளதாக ஒருபக்கம் கூறினாலும் இன்னொரு பக்கம் அதே ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற துறைகளிலும் மற்ற எமிரேட்டுகளிலும் பணிபுரியும் நபர்கள் ஒரு நாள் விடுமுறையை மட்டுமே வாரத்தில் பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!