வளைகுடா செய்திகள்

அதிகளவு இந்தியர்களை பணியமர்த்திய வளைகுடா நாடுகளில் முதலிடம் பிடித்த சவூதி..!!

வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் இந்தியர்களில் பெரும்பாலானோர் வசிக்கும் நாடுகளாக இருப்பது வளைகுடா நாடுகள் தான். இந்த நாடுகளில் படித்திருக்கோமோ இல்லையோ எப்படியென்றாலும் வீட்டு தொழிலாளர்கள் முதல் டாக்டர், இஞ்சினீயர் என அனைத்து துறைகளிலும் பல தசாப்தங்களாக பெரும்பாலான பணியிடங்களில் வேலை பார்த்து வருபவர்களில் முக்கிய பங்கு இந்தியர்களுக்கு உண்டு.

சமீப காலமாக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து தங்கள் நாட்டவர்களையே பணிக்கு அமர்த்த பல்வேறு முயற்சிகளை இந்த நாடுகள் எடுத்து வந்தாலும் இன்றளவும் இலட்சக்கணக்கான இந்தியர்களுக்கான வாழ்வாதாரத்தை தற்போழுது வரை தந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள (MEA) தரவுகளின்படி, நாட்டின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேலை பார்ப்பவர்களில் 70% பேர் பகுதியளவு திறன் மற்றும் திறமையற்ற அல்லது கல்வியறிவு இல்லாத தொழிலாளர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 20 முதல் 23% வரையிலான இந்தியர்கள் மட்டுமே மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் (chartered accountants) மற்றும் வங்கி அதிகாரிகள் போன்ற பதவிகளில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பில் வளைகுடா நாடுகளிலேயே சவூதி அரேபியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவர தரவுகளின்படி, சவூதி அரேபியாவில், 2021 ஆம் ஆண்டில் 32,845 இந்தியர்களுக்கும், 2020-இல் 44,316 இந்தியர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், இந்த விகிதம் 2022 ஆம் ஆண்டில் ஐந்து மடங்கு அதிகரித்து சுமார் 178,630 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 2018 இல் அதிக இந்தியர்களை பணியமர்த்தியதாக பெயரெடுத்த ஐக்கிய அரபு அமீரகமானது கடந்த ஆண்டுகளில் இந்தியர்களை பணியமர்த்துவதில் சற்று வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் 57,613 இந்தியர்களை 2018 ஆம் ஆண்டில் பணியமர்த்தியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் சற்று குறைவான எண்ணிக்கையான 45,712 இந்தியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வரிசையில் இந்தியர்களை அதிகளவில் பணியமர்த்தும் நாடுகளில் குவைத் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் 10,232 நபர்களுடன் பஹ்ரைன் கடைசி இடத்தில் உள்ளது என தகவல் கூறப்பட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலின் மூலம் நாட்டின் பெரும்பாலான வேலைப்பிரிவுகளில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக நாட்டு குடிமக்களை பணியமர்த்தி வருவதில் தீவிரம் காட்டி வரும் சவூதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதே போல் பல துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இருந்தும் வெளிநாட்டவர்களை குறைக்க போராடும் குவைத் நாடும் இந்த வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!