அமீரக செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய உட்புற செங்குத்துப் பண்ணை அமீரகத்தில் திறப்பு!!

அபுதாபியின் தொழில்துறை பகுதியான முசாஃபாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (research and development – R&D) உலகின் மிகப்பெரிய உட்புற செங்குத்து பண்ணை (indoor vertical farm) திறக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன R&D வசதி, ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட AeroFarms நிறுவனத்தின் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள முதல் செங்குத்து பண்ணை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது AeroFarms AgX நிறுவனம் மற்றும் அபுதாபி முதலீட்டு அலுவலகத்தின் ஆதரவுடன் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து AeroFarms AgX நிறுவனத்தின் பொது மேலாளர் ஃபாடி ஸ்பாடி அவர்கள் ஊடகங்களிடம் கூறுகையில், இந்த திட்டம், உலகளவில் விவசாயத்தில் உள்ள சில சவால்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஒரு செடி ஆரோக்கியமாக வளர அதை வீட்டிற்குள் உருவகப்படுத்த (simulate indoors) முயற்சி செய்வதாகவும், இயற்கையாக கிடைக்கும் வானிலை, சூரிய உதயம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் உள்ள வேறுபாடு ஆகியவற்றிலிருந்து அனைத்தையும் மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வசதியானது வளரும் அறை (grow chamber), துல்லியமான உட்புற தாவரங்களின் அறை (precision indoor plants’ room), மரங்கள் வளர்க்கப்படும் வேக இனப்பெருக்க அறை (speed breeding room where trees are being grown), R&D சுற்றுச்சூழல் வளர்ச்சி அறை (R&D environmental growth chamber), R&D ஆய்வக இடம் (R&D lab space) போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த செங்குத்துப் பண்ணையில் வேறு எதுவும் உற்பத்தி செய்யவில்லை என்றும், இது R&Dக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் சரியான வளர்ச்சிக்கான வழிமுறைகளையும், தொழில்துறைக்கான தீர்வுகளையும் கண்டறிய முயற்சிப்பதாகவும், மேலும், 30 வகையான பச்சை இலைகளை இங்கு பரிசோதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சில எமிரேட்டிகள் உட்பட 12 விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த வசதியில் வேலை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. AeroFarms AgX ஆனது, ஆராய்ச்சியை நடத்தும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு 60 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், தோட்டக்கலை நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வேலைக்கு அமர்த்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. AeroFarms இன் உட்புற செங்குத்து பண்ணையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம், ஆரோக்கியமான தாவரங்கள் செழித்து வளர சரியான சூழ்நிலையை வழங்குவதாகவும், அதே நேரத்தில் 95 சதவிகிதம் குறைவான தண்ணீரைப் பயன்படுத்துவதுடன் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் வளர உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செங்குத்துப் பண்ணை குறித்து அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான மரியம் பின்த் முகமது சயீத் ஹரேப் அல்மெய்ரி அவர்கள் கூறுகையில், இது போன்ற தளத்தை அபுதாபியில் நிறுவியதற்காக AeroFarms நிறுவனத்தை பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல், பூச்சிக்கொல்லி இல்லாமல் தாவரங்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!