வளைகுடா செய்திகள்

ஹஜ் பயணத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்கிய சவூதி அரேபியா..!!

சவூதி அரேபியாவில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மூன்று வருடங்களாக இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு, ஹஜ் பயணத்திற்கான இந்த கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கொரோனா பரவலுக்குப் பின் ஹஜ் மேற்கொள்ளும் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை விதித்த சவுதி அரேபியா அரசானது இதனடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழிபாட்டாளர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையில் சவூதி அரசு வரம்புகளை விதிக்காது என்று சவூதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சவூதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபியா ரியாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வழிபாட்டாளர்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முன்பு இருந்த நிலை போன்று, வயது வரம்பு இல்லாமல் ஹஜ் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சவூதியில் கடந்த  2019 ஆம் ஆண்டில், சுமார் 2.5 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். ஆனால் தொற்றுநோய் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக  2022 இல், கிட்டத்தட்ட 900,000 வழிபாட்டாளர்கள் ஹஜ் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதில் 780,000 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அவர்கள் 65 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் அத்துடன் கொரோனாவிற்கான எதிரான தடுப்பூசி மற்றும் எதிர்மறை சோதனை சான்றிதழை வழங்க வேண்டும் என்று விதி செயல்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!