அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதத்தில் பிச்சை எடுக்க இலவச விசா, விமான டிக்கெட், தங்குமிடம்.. வெளிநாட்டிலிருந்து ஆட்களை அழைத்து வந்த கும்பல்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் பல்வேறு எமிரேட்களில் பிச்சை எடுத்து வந்த ஏராளமான பிச்சைக்காரர்களை கைது செய்துள்ளனர். அதில் பல பிச்சைக்காரர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சேர்ந்து பிச்சை எடுத்து பெருந்தொகையை குவித்துள்ளதையும் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் நாளை முதல் துவங்குவதால் அனுதாபத்தில் பிச்சைக்காரர்களுக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே நன்கொடை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.

ரமலான் மாதம் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பிச்சை எடுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை காவல்துறை தொடர்ந்து பொதுமக்களுக்கு நினைவூட்டி வருகிறது. மேலும், பிச்சைக்காரர்களுடன் பழகுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களை காவல்துறை எச்சரித்தும் வருகிறது. அத்துடன் புனித மாதத்திற்கு முன்பு பிச்சைக்காரர்களை ஒடுக்க போலீசார் ரோந்து பணியையையும் முடுக்கி விட்டுள்ளது.

காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான பிச்சைக்காரர்கள் வெளிநாட்டில் இருந்து சில மர்ம கும்பல்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் இருந்து பிச்சைக்காரர்களை அமீரகத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு விசா, விமான டிக்கெட் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கி, அவர்களின் தினசரி வருமானத்தில் 80 சதவீத தொகையை அந்த கும்பல் பெற்றுக்கொண்டதும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் மசூதிகள், சந்தைகள், குடியிருப்புப் பகுதிகள், ரமலான் கூடாரங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற பொது இடங்களில் அனுதாபத்தை பயன்படுத்தி பொதுமக்களை பிச்சைக்காரர்கள் ஏமாற்றுகின்றனர். இது போன்று ஏமாற்றி பிச்சை எடுப்பது கொள்ளையடித்தல் மற்றும் சட்டவிரோதமாக பணம் திரட்டுதல் போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது.

துபாயில் ஒவ்வொரு ஆண்டும் பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை ‘Begging is a Wrong Concept of Compassion’ என்ற பிரச்சாரத்தின் கீழ், இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறநிலையச் செயல்பாடுகள் துறை, வதிவிட மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) மற்றும் துபாய் முனிசிபாலிட்டியுடன் இனைந்து துபாய் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

பொது குற்றப் புலனாய்வுத் துறையின் ஊடுருவல் தடுப்புத் துறையின் இயக்குநர் கர்னல் அலி சலேம் சயீத் அல் ஷம்சி இது குறித்து கூறும்போது, இ-க்ரைம் தளம், ‘போலீஸ் ஐ’ மற்றும் துபாய் காவல்துறையின் கால் சென்டர் (901) போன்றவற்றின் மூலம் பிச்சை எடுப்பவர்கள் குறித்து புகைரளிக்கலாம் என்றும், சமூகத்தில் அதிகரித்த விழிப்புணர்வு காரணமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரச்சாரங்கள் மூலம் பிச்சை எடுக்கும் கும்பல்களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டில் பிச்சை எடுப்பது தொடர்பாக குடியிருப்பாளர்களிடமிருந்து 2,235 புகார்களை துபாய் காவல்துறை பெற்றுள்ளது, இதில் 1,956 (901) கால் சென்டர் மூலமாகவும், 279 ‘Police Eye’ சேவை மூலமாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில், 382 பிச்சைக்காரர்கள் மற்றும் 222 தெருவோர வியாபாரிகள் உட்பட 604 நபர்களை துபாய் காவல்துறை கைது செய்துள்ளது.

அத்துடன் ‘Ramadan Aman’ என்ற பிரச்சாரத்தின் கீழ் பிச்சை எடுப்பதைத் தடுக்கவும், தெருவோர வியாபாரிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், குடியிருப்பு பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களின் நடமாட்டத்தை ரோந்துப் படையினர் கண்காணித்து வருவதாக ஷார்ஜா காவல்துறையின் செயல்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் இப்ராஹிம் அல் அஜெல்லும் தெரிவித்துள்ளார்.

பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டங்கள்:

பிரிவு 475-இன் படி, பிறரிடம் கெஞ்சியோ அல்லது எவ்வகையிலோ பணமோ அல்லது பொருளுதவியோ வழங்குமாறு வேண்டிக்கொண்டால், அவருக்கு மூன்று (3) மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுவதுடன் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். பின்வருமாறு மோசடி அல்லது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி பிச்சை எடுத்தால் கடுமையான குற்றமாகக் கருதப்படும்:

பிரிவு 476-இன் படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குழுவால் நடத்தப்படும் பிச்சையை நிர்வகிக்கும் எந்தவொரு நபருக்கும், ஆறு (6) மாதங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பிச்சைக்காரர்கள் குறித்த புகார்களை குடியிருப்பாளர்கள் காவல்துறையிடம் தெரிவிக்க அனைத்து எமிரேட்களும் உதவி எண்களை வெளியிட்டுள்ளது. அவை,

  • அபுதாபி: 999 அல்லது 8002626, 2828ல் SMS அல்லது [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பவும்
  • துபாய்: 901 அல்லது 800243 அல்லது 8004888
  • ஷார்ஜா: 901 அல்லது 06-5632222 அல்லது 06-5631111
  • ராஸ் அல் கைமா: 07-2053372
  • அஜ்மான்: 06-7034310
  • உம் அல் குவைன்: 999
  • ஃபுஜைரா: 09-2051100 அல்லது 09-2224411.

Related Articles

Back to top button
error: Content is protected !!