அமீரக செய்திகள்

அபுதாபி: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து..!! 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்…!! 7 பேர் காயம்..!!

அபுதாபியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அபுதாபியில் இருக்கக்கூடிய முவாசாஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அபுதாபியின் சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்தவர்களில் இருவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிவில் பாதுகாப்பு துறை இரங்கலை தெரிவித்ததுடன், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடையவும் ஆறுதல் தெரிவித்துள்ளது. அத்துடன் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது பற்றி கிடைத்துள்ள தகவல்களின் படி, குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், மருத்துவ பணியாளர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் என்றும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கான முழு காரணங்களும் தெரியாத நிலையில், சம்பவம் குறித்த வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும் குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், கடந்த மாதம் துபாயின் அல் ராஸில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒன்பது பேர் காயமடைந்தனர். இதுபோன்ற தீ விபத்துகள் அடுத்தடுத்துத் தொடர்வதைத் தவிர்த்து, குடியிருப்பாளர்களையும் பொருட்களையும் தீயில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையம், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த மாத தொடக்கத்தில் கள ஆய்வு ஒன்றைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கட்டிடங்களில் புகை கண்டறியும் கருவிகள் மற்றும் தீயணைப்பு கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, ஷார்ஜாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிய திட்டமானது கட்டிடங்களின் முகப்பில் தீயை தடுக்கும் வகையில் முகப்பை மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!