துபாய்: இரவில் குளிப்பதற்கு பிரத்யேகமாக மூன்று புதிய 24/7 கடற்கரைகளை திறந்த துபாய் முனிசிபாலிட்டி.. இனி எப்ப வேணாலும் குளிக்கலாம்..!!

துபாயில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இனி எப்போது வேண்டுமானாலும் குறிப்பாக சூரியன் மறைந்ததற்குப் பிறகும் கடலில் நீந்தி குளித்து மகிழும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் மூன்று புதிய கடற்கரைகள் திறக்கப்படுவதாக துபாய் முனிசிபாலிட்டி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பொதுவாக, கடற்கரைகளில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படும்.
தற்போது, பார்வையாளர்கள் எந்த நேரத்திலும் நீச்சலை அனுபவிக்கும் வகையில், ஜுமைரா 2, ஜுமைரா 3 மற்றும் உம் சுகைம் 1 ஆகிய இடங்களில் 800 மீட்டர் அளவில், இரவு நீச்சல் கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளதாக துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. மேலும், இங்கு காவலர்கள் இரவு நேரத்தில் கடலில் குளிப்பவர்களை கண்காணிக்க பிரகாசமான விளக்கு அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, இங்கே நிறுவப்பட்டுள்ள எலெக்ட்ரானிக் திரையில் கடற்கரைக்கு செல்பவர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் அறிவுரைகளும் தோன்றுகின்றன. கூடவே, பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிநவீன மீட்பு மற்றும் அவசரகால கருவிகளைப் பயன்படுத்தும் தகுதிவாய்ந்த உயிர்காப்பாளர்களும் இரவு நேரத்தில் கடற்கரைகளில் உள்ளனர். அவர்களது அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதுடன் கடற்கரையின் தூய்மையை பராமரிக்கவும் பார்வையாளர்களை துபாய் முனிசிபாலிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.
அதேசமயம், இரவில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நீந்த வேண்டும் என்றும் மற்ற பகுதிகளில் இருந்து கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி வலியுறுத்தியுள்ளது. மேலும், குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் கண்காணித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் பார்வையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் இயக்குனர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி அவர்கள் கூறுகையில், துபாய் முனிசிபாலிட்டி எமிரேட்டின் அழகிய கடற்கரைகளை நகரத்தின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களாக மேம்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும், புதிய வசதிகள் துபாய் கடற்கரைகளின் சுற்றுலாத் தர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துபாய் எமிரேட்டின் கடற்கரைகள் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அழகைக் கொண்டு, மக்கள் துடிப்பான கடலோர உணவு மற்றும் பல்வேறு செயல்பாடுகளை அனுபவிக்கும் வாய்ப்பை குடியிருப்பாளர்களுக்கும், சுற்றுலாவாசிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் மற்றும் நீச்சல் பிரியர்களுக்கும் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.