அமீரக செய்திகள்

மழையின் போது துபாய் ரோட்டில் சினிமா பாணியில் ஸ்டண்ட் …. சோசியல் மீடியா பதிவின் மூலம் மடக்கி பிடித்த துபாய் போலீஸ்!

துபாயில் மழை பெய்த பொழுது ஆபத்தான ஸ்டண்ட் செய்ததற்காக ஓட்டுநர்கள் துபாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமாவில் வருவது போன்று நான்கு சக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்து அதனை சமூக ஊடகங்களிலும் அதிகமான லைக்குகளை பெறுவதற்காக வாகன ஓட்டுநர்கள் இத்தகைய செயலை செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஸ்டண்டின் வீடியோவில், ஈரமான சாலையில் வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை தாறுமாறாக ஓட்டுவதை காட்டுகிறது. எனவே இந்த வீடியோ மூலம் துபாய் காவல்துறை எளிதாக ஓட்டுநர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்துள்ளது. அத்துடன் உடனடியாக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தியில் இந்த டிரிஃப்டிங் ஸ்டண்ட் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து பொதுத் துறையின் செயல் இயக்குநர் பிரிக் ஜுமா பின் சுவைடன் கூறும்பொழுது, குறிப்பாக மோசமான காலநிலையின் போது பொறுப்புடன் வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.


பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு வகையில் வாகனம் ஓட்டினாலும் சட்டம் கடுமையாக தண்டிக்கும் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக நிலையற்ற காலநிலையின் போது போக்குவரத்து சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அனைத்து வாகன ஓட்டுனர்களையும் பிரிக் பின் சுவைடன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஸ்டண்ட் அல்லது பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோர் நியமிக்கப்பட்ட பகுதிகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பெற்றோர்கள் இப்பொழுது இருந்தே குழந்தைகளுக்கு சாலையில் எப்படி செல்ல வேண்டும் எனவும், சாலைகளை எப்படி கண்காணிக்க வேண்டும் எனவும் கவனிக்க ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் துபாய் காவல்துறை அதிக ரோந்து மற்றும் கடுமையான அமலாக்கத்துடன், ஆபத்தான வாகனம் ஓட்டும் நடத்தைகளைத் தடுக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!