அமீரக செய்திகள்

ஈத் விடுமுறைக்கு துபாயில் நடத்தப்படும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள்.. நேரம், இடம், போக்குவரத்து விபரம் இதோ..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டின் இரண்டாவது மிகப்பெரிய நீண்ட வார இறுதியான ஈத் அல் அதா விடுமுறையானது, ஜூன் 27 முதல் தொடங்குகிறது. இந்த நீண்ட வார இறுதியில் அமீரக குடியிருப்பாளர்கள், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் மற்றும் துபாய் பார்க்ஸ் & ரிசார்ட்ஸில் இலவச வானவேடிக்கை கண்காட்சிகளில் இலவசமாக கலந்துகொள்ளலாம்.

நீங்கள் தவறவிடக் கூடாத அத்தகைய கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம், நேரம் மற்றும் பயண விபரங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பின்வருமாறு காணலாம்.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்:

ஈத் பண்டிகைக் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாளான ஜூன் 29 ஆம் தேதியன்று இரவில், வானவேடிக்கை பட்டாசுகளால் வானம் ஒளிர்வதைக் காணலாம். அத்துடன் அழகிய நீரூற்றுகள் வர்ணஜாலமான பல வண்ண லேசர் ஒளியில் அசையும் வாட்டர்ஃபிரண்ட் லைட் ஷோவையும் இங்கு கண்டுகளிக்கலாம்.

நேரம்: இரண்டு நிகழ்சிகளும் இரவு 8 மணிக்கு தொடங்கும். வானவேடிக்கை நிகழ்சிகளுக்குப் பிறகு, பொது விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் அதிகாலை 1 மணி வரை மால் திறந்திருக்கும்.

இடம்: துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், கிரசண்ட் ரோடு.

மெட்ரோ மற்றும் பேருந்து வழி பயணம்: மெட்ரோவில் பயணித்தால், எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்திற்கு (ரெட் லைன்) சென்று, பின்னர் அங்கிருந்து எமிரேட்ஸ் மெட்ரோ பேருந்து நிறுத்தம் – 02 ஐ அடைய வேண்டும். அங்கிருந்து F08 Feeder பேருந்தில் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலுக்கு செல்லலாம்.

அப்ரா வழி பயணம்: துபாயின் பாரம்பரிய போக்குவரத்து வசதியான அப்ராவிலும் நீங்கள் பயணிக்கலாம். அதற்கு முதலில், அல் ஜதாஃப் மரைன் டிரான்ஸ்போர்ட் ஸ்டேஷனிலிருந்து துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மரைன் டிரான்ஸ்போர்ட் ஸ்டேஷனை நோக்கி செல்லும் அப்ராவில் ஏற வேண்டும். இந்த அப்ரா ஆறு நிமிடங்களில் உங்களை ஃபெஸ்டிவல் பே பகுதிக்கு அருகே இறக்கிவிடும். இந்த பயணத்திற்கு 2 திர்ஹம் செலவாகும்.

துபாய் பார்க்ஸ் & ரிசார்ட்ஸ்:

ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு, இங்கு ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு இலவச வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. எனவே, இடைவிடாத உற்சாக அனுபவங்களுக்கு இந்த தீம் பூங்காவை அணுகலாம். இங்கு மொத்தம் ஐந்து தீம் பார்க்குகள் உள்ளன.

நேரம்: வானவேடிக்கை நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கும்.

இடம்: ஷேக் சையத் சாலை (E11), பாம் ஜெபல் அலிக்கு எதிரில்.

செலவு: துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸில் வானவேடிக்கை நிகழ்ச்சி இலவசம், இருப்பினும் பார்வையாளர்கள் தீம் பூங்காவிற்குள் நுழைய டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். ஒரு டிக்கெட்டின் விலை 330 திர்ஹம், மேலும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக நுழையலாம்.

போக்குவரத்து விபரம்: காரில் பயணிப்பவர்கள் துபாய் மெரினா மற்றும் ஜெபல் அலியை கடந்து அபுதாபியை நோக்கி செல்லும் E11 நெடுஞ்சாலையில், Exit 5 ல் இந்த பார்க்கிற்கு செல்லலாம்.

பொதுப்போக்குவரத்தில் செல்ல திட்டமிடுபவர்கள், ஜெபல் அலியை நோக்கி செல்லும் துபாய் மெட்ரோ ரெட் லைனில் இப்ன் பதுதா மெட்ரோ நிலையத்திற்குச் செல்லவும். மெட்ரோ நிலையத்திற்கு வெளியே இப்ன் பதுதா பேருந்து நிலையம் உள்ளது. அங்கிருந்து RTA வின் பொது ஷட்டில் பேருந்தில் செல்லலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!