அமீரக சட்டங்கள்

UAE: உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை கண்டறிவது எப்படி..?? தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் எப்படி புகாரளிப்பது..?? முழு விபரங்களும் இங்கே…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நீங்கள் சில சமயங்களில், நீங்கள் பயன்படுத்தாத மொபைல் எண்களை உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் பதிவு செய்திருக்கலாம். இதனால் அந்த எண்ணை பயன்படுத்தும் நபர் ஏதேனும் குற்றம் புரிந்தால் அந்த எண்ணில் உங்களின் எமிரேட்ஸ் ஐடி பதிவு செய்யப்பட்டிருந்தால் அது உங்களுக்கு பிரச்சனையாக்க வாய்ப்புண்டு. பொதுவாக இத்தகைய சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் மிக சிறிய அளவில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதுண்டு. இதனை தவிர்க்க உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் நீங்கள் பயன்படுத்தாத அல்லது நீங்கள் வாங்காத மொபைல் எண்ணைக் கண்டறிந்து நீக்க வேண்டும். இது எளிதில் கண்டறிய முடியுமா என்று சிலர் நினைப்பதுண்டு. அவர்களுக்கான பதிவுதான் இது.

அமீரகத்தில் தனிநபர் ஒருவரின் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களையும் பார்ப்பதற்கு ‘Hesabati’ என்ற டிஜிட்டல் சேவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அமீரக குடியிருப்பாளர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் தவறான பயன்பாட்டிற்கு சிம் கார்டுகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.

குறிப்பாக, எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் மற்றும் குடியிருப்பாளர்கள் இந்த சேவையை இலவசமாக அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்த சேவையைப் பயன்படுத்த உங்களிடம் UAE PASS இருக்க வேண்டும், இது குடிமக்கள் மற்றும் அமீரகத்தில் வசிப்பவர்களுக்கான தேசிய டிஜிட்டல் அடையாளமாகும்.

நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) வழங்கிய இந்த டிஜிட்டல் சேவையை சமீபத்தில், அமீரக டிஜிட்டல் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு (@uaedgov) ப்ரோமாட் செய்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இலவச டிஜிட்டல் சேவையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த விவரங்களைப் பின்வரும் பத்திகளில் பார்க்கலாம்.

‘Hesabati’ சேவை:

ஐக்கிய அரபு அமீரகத்தின் TDRA ஆல் அறிமுகம் செய்யப்பட்ட ’Hesabati’ டிஜிட்டல் சேவையை அணுக வேண்டுமெனில், உங்களிடம் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி இருக்க வேண்டும். இதன் மூலம், தனிநபர் ஒருவரின் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் அவரது கவனம் அல்லது ஒப்புதல் இல்லாமல் எந்த சிம் கார்டும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்து, மொபைல் எண்களின் தவறான பயன்பாட்டிற்கு எதிராக பாதுகாத்துக் கொள்ளலாம்.

எவ்வாறு சேவையை அணுகுவது?

>> முதலில் https://tdra.gov.ae/en/ என்ற லிங்க் மூலம் TDRA முகப்புப் பக்கத்தைப் பார்வையிடவும். ‘Our Initiatives’ என்ற பிரிவைக் காணும் வரை திரையைக் கீழே ஸ்க்ரோல் செய்யவும்.

>> ‘Hesabati’ என்பதன் கீழ் ‘read more’ என்பதைக் கிளிக் செய்து, ‘here’ என்பதைக் கிளிக் செய்யவும்.

>> அடுத்தபடியாக, உங்களின் UAE PASS மூலம் உள்நுழைந்து ‘Create an account’ என்பதைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பத்தை கிளிக் செய்த பின்னர், TDRA மற்றும் UAE Pass தானாகவே உங்களுக்காக ஒரு கணக்கை உருவாக்கும்.

>> சில நிமிடங்களுக்குப் பிறகு, ‘Hesabati’ சேவையானது உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களின் பட்டியலை காண்பிக்கும்.

>> உங்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலில் பின்வரும் விவரங்கள் இருக்கும்: மொபைல் எண், மொபைல் எண்ணின் வகை (ப்ரீ- பெய்டு அல்லது போஸ்ட்-பெய்டு), உங்கள் மொபைல் ஃபோன் சந்தா திட்டம் மற்றும் உங்கள் மொபைல் ஃபோன் பதிவு காலாவதி தேதி, இது உங்களின் எமிரேட்ஸ் ஐடி காலாவதி தேதி போன்றது.

>> அதேசமயம், பட்டியலில் உங்களுக்குத் தெரியாத மொபைல் எண்ணைக் கண்டால், உங்கள் பெயரில் அங்கீகரிக்கப்படாத சிம் உள்ளது என்று அர்த்தம். எனவே, மொபைல் எண்ணின் கீழ் உள்ள ‘Make A Complaint’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அதன்பிறகு, உங்களின் மொபைல் சேவை வழங்குநரைத் (Du, Etisalat மற்றும் Virgin Mobile) தேர்ந்தெடுத்து, இது குறித்த விளக்கத்தை உள்ளிட்டதும் ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும். இறுதியாக, புகாரைச் சமர்ப்பித்ததும் புகாரின் நிலையை கண்காணிப்பதற்கான எண்ணைப் பெறுவீர்கள், மேலும் TDRA உங்களை மின்னஞ்சல் மூலம் பின்தொடரும். அதுபோல, 800 12 என்ற TDRA இன் கால் சென்டர் எண்ணிற்கு அழைப்பதன் மூலமும் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

இல்லையெனில், உங்கள் மொபைல் சேவை வழங்குனரை நேரடியாகத் தொடர்பு கொண்டு, உங்கள் பெயரில் அங்கீகரிக்கப்படாத சிம் கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர்களுக்குத் தெரிவிக்கலாம்.

  • எடிசலாட் – 800 101
  • Du – 800 155
  • Virgin Mobile – ‘Virgin Mobile UAE’

Related Articles

Back to top button
error: Content is protected !!