அமீரக செய்திகள்

UAE: வெளிநாட்டவர்களின் பல்கலைக்கழக சான்றிதழ்களை அங்கீகரிக்க புதிய அமைப்பு அறிமுகம்.. முந்தைய தேவைகளை நீக்கிய அமீரக அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சகம், வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் (higher education institutions – HEIs) வழங்கும் சான்றிதழ்களை அங்கீகரிக்க புதிய அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. அமீரகத்தில் ஏற்கனவே இருந்த ‘university qualification equivalency’ என்ற சான்றிதழ் சரிபாரப்பு திட்டமானது தற்போது ‘university certificates recognition’ என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அமீரக அரசு அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அமைப்பானது, வேறு நாடுகளிலிருந்து வழங்கப்படும் பல்கலைக்கழக சான்றிதழ்களை அங்கீகரிக்கும். அத்துடன், தனிநபர்கள் தங்கள் கல்வியை அமீரகத்தில் தொடர அல்லது அமீரகத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கவும் இந்த அமைப்பு உதவும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், முந்தைய டிகிரிகளை சான்றளிப்பதற்கான தேவை, தொலைதூரக் கற்றல் கடன்கள் மற்றும் கடன் பரிமாற்ற வரம்புகள் போன்ற முந்தைய அமைப்பில் இருந்த பல நிபந்தனைகளும் வரைமுறைகளும் இந்த புதிய அமைப்பில் நீக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இப்போது தொலைதூரக் கற்றல் மூலம் சான்றிதழ்களைப் பெறுவதும் அமீரகத்தில் அனுமதிக்கப்படுகிறது. அதாவது, பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற சிறப்புத் தொழில்கள் தொடர்பான சான்றிதழ்களைத் தவிர, அனைத்து கல்விச் சான்றிதழ்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், சான்றிதழ் வழங்கிய உயர் கல்வி நிறுவனங்கள், இந்த புதிய அமைப்பில் அதன் தரவரிசையை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, உயர் கல்வி நிறுவனங்களின் தரம் குறைவாக இருந்தால், பல்கலைக்கழக சான்றிதழுக்கான அங்கீகாரத்தைப் பெற அதிக நிபந்தனைகளும் தேவைகளும் விதிக்கப்படும்.

உதாரணமாக, 1 முதல் 200 தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, சான்றிதழின் செல்லுபடியை சரிபார்க்க எந்தவித நிபந்தனைகளும் வரம்புகளும் பயன்படுத்தப்படாது. ஆனால், 601 மற்றும் அதற்கு மேல் தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்களை அங்கீகரிக்க கூடுதல் நிபந்தனைகளும் தேவைகளும் பயன்படுத்தப்படும்.

இது குறித்து கல்வி அமைச்சர் டாக்டர் அஹ்மத் பெல்ஹவுல் அல் ஃபலாசி அவர்கள் கூறுகையில், புதிய முறையானது மாணவர்கள் கல்வி அல்லது வேலைவாய்ப்பு நடைமுறைகளை முறையாக முடிக்கவும், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கக்கூடிய சேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சான்றிதழ் அங்கீகாரச் செயல்முறையை எளிதாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!