வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியாவில் வேலையை விடுவதற்கு விதிமுறைகள் என்ன.? வேலையை விட்டு நீக்க முதலாளிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன.?

சவுதி அரேபியா நாடானது, தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய இருவரும் நன்மையடையும் நோக்கில் கடந்த சில வருடங்களாக தொழிலாளர் சட்டத்தில் (Saudi Arabia Labour Law) பல முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டவர்கள் வேலை செய்வதற்கு ஏற்ப ஒரு நம்பகமான நாடாக சவுதி அரேபியா திகழ்ந்தாலும், தொழிலாளர் சட்டத்தில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பற்றி அங்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் அது பற்றி முழுமையாக இன்னும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

எனவே, உங்களுக்காக சவுதி அரேபியா தொழிலாளர் சட்டத்தில் உள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பணிநீக்க நடைமுறைகளுக்கான எளிதான வழிகாட்டி இங்கே சிறப்பு பதிவாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்களும் பயனடைந்து உங்கள் நண்பர்களும் பயனடைய அவர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள்.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம்:

சவூதி அரேபியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்துகின்றன. மார்ச் 2021 இல் நடைமுறைக்கு வந்த தீர்மானம் எண். 51848/1442- எனும் சட்டமானது ஊழியர்கள் வேலையை விட்டுச் செல்வதை எளிதாக்கியது.

தீர்மானம் எண். 51848/1442 இன் கீழ், ஊழியர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை பின்பற்றினால் போதுமானது:

  • ஒப்பந்தம் முடிவடையும் போது அவர்களின் முதலாளியின் அனுமதியின்றி வேலையை விட்டுவிடலாம்.
  • அவர்கள் 90 நாட்களுக்கு முன் அறிவிப்பை (prior notification) வழங்கினால், ஒப்பந்தம் முடிவதற்குள் வேலையை விட அனுமதி உண்டு.
  • வேலை வாய்ப்புகள் மற்றும் உள்ளீடு பரிமாற்ற கோரிக்கைகளைப் பார்க்க மின்னணு போர்ட்டலை அணுக வேண்டும்.

புதிய சீர்திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, இகாமா விசா மற்றும் ஒர்க் பெர்மீட்டில் சவுதி அரேபியாவில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் முதலாளியின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற முடியாது.

ஆனால், இப்பொழுது ​​அவர்கள் சவூதி அரசாங்கத்தின் ஆன்லைன் போர்ட்டலை அணுகலாம். அங்கு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் (Exit) மற்றும் மீண்டும் நுழைவதற்கான (Re-Entry) கோரிக்கையை மேற்கொள்ளலாம். அதேபோல் தொழிலாளர்கள் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறவும், தங்கள் சொந்த நாட்டிற்கு மீண்டும் குடியேறவும் இனி முதலாளியின் அனுமதி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் உள்ள முதலாளிகள் எவ்வாறு ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம்?

சவூதி அரேபியாவில் உள்ள ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் வேலை செய்வார்கள். ஒப்பந்த முடிவடையும் தேதி வந்ததும், புதுப்பிக்க வேண்டாம் என முதலாளி தேர்வு செய்தால், அவர்கள் தகுந்த அறிவிப்பை வழங்க வேண்டும். அதற்குப்பின் பணி நீக்கம் செய்ய முதலாளிக்கு அனுமதி உண்டு.

சவூதி தொழிலாளர் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் எழுத்துப்பூர்வ காரணத்தை வழங்கினால், முதலாளிகள் காலவரையற்ற ஒப்பந்தங்களுடன் ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம். மாதாந்திர ஊதியம் இருந்தால் 60 நாட்களுக்கு முன்னதாகவும் இல்லையெனில் 30 நாட்களுக்கு முன்னதாகவும் தொழிலாளருக்கு இது குறித்து முதலாளி தெரிவிக்க வேண்டும்.

முதலாளி தொழிலாளியை உடனடியாக பணிநீக்கம் செய்ய விரும்பினால், சரியான அறிவிப்பு காலத்தில் (notice period) அவர்கள் பெற்ற ஊதியத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

பணிநீக்கம் நடைமுறையைப் பின்பற்றாவிட்டால் தண்டனைகள் என்ன?

பணி நீக்க நடைமுறைகள் மீறப்பட்டால், பணியாளரை முதலாளி தவறாக பணி நீக்கம் செய்துள்ளார் என்று நீதிமன்றம் பெரும்பாலும் தீர்மானிக்கும். எனவே,  வழக்கில், சம்பந்தப்பட்ட முதலாளி பணியாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தொழிலாளியை பணிநீக்கம் செய்வதற்கு எவ்வளவு கால வாசம் வழங்க வேண்டும்?

பெர்மிட் முடிந்தவுடன் தொழிலாளியை வேலையில் இருந்து நிறுத்துவதற்கு கால அவகாசம் எதுவும் தேவையில்லை. அது தவிர, தொழிலாளர்கள் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டால், சட்டத்திற்கு புறமான செயல்கள் செய்தால் அவர்களை பணி நீக்கம் செய்யலாம்.

காலவரையற்ற கால ஒப்பந்தங்களுக்கு, ஒப்பந்தத்தை முடிப்பதற்கான சரியான காரணத்தை முதலாளிகள் வைத்திருக்க வேண்டும் மற்றும் பணியாளருக்கு 60 நாட்கள் அறிவிப்பு கொடுக்க வேண்டும். சரியான காரணங்களில் மோசமான செயல்திறன் அல்லது தவறான நடத்தை போன்றவையும் அடங்கும்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை

முதல் ஐந்து வருடங்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாட்கள் ஊதியம் அவர்களுக்கு போனசாக வழங்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு வருடத்திற்கும் முழு மாத ஊதியம் போனசாக வழங்கப்படும்.

சவுதி அரேபியாவின் தொழிலாளர் சட்டத்தில் பணியமர்த்தல், ஊதியம் மற்றும் பணிநீக்கம் வரை அனைத்திற்கும் குறிப்பிட்ட விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த விதிகளை தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை தாராளமாக அணுகினால் உங்களுக்கான நீதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!