அமீரக செய்திகள்

ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள்!! அமீரக வானில் இரவை அலங்கரிக்கும் முழுநிலவு – பூமிக்கு மிக அருகில் நெருங்கும் நேரம்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் வானத்தை பிரகாசமாக மிளிர வைக்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள் வரவுள்ளன. முதலாவது பிரகாசமான முழுநிலவு ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று காட்சியளிக்கும். இதனையடுத்து ஆகஸ்ட் 30இல் வானில் தோன்றக்கூடிய முழுநிலவு, 2023 இன் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான சூப்பர்மூனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘Supermoon Observation Event’ என்ற பிரத்யேக ஸ்கைவாட்ச்சிங் நிகழ்வை, துபாய் அஸ்ட்ரோனமி குரூப் (Dubai Astronomy Group-DAG) ஏற்பாடு செய்துள்ளது. இது எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை அல் துரையா அஸ்ட்ரோனமி சென்டரில் நடைபெறும் என்று DAG தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சிறப்பு ஸ்கைவாட்ச்சிங் நிகழ்வை அனைத்து DAG உறுப்பினர்களும் இலவசமாக அணுகலாம் என்றும் பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தில் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அங்கு தொலைநோக்கி கண்காணிப்பு, DAG தொலைநோக்கிகள் மூலம் நிலவின் ஃபோன் ஃபோட்டோகிராபி எடுத்தல் மற்றும் சூப்பர் மூன் பற்றிய கேள்வி பதில்கள் அமர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூப்பர் மூன் என்றால் என்ன?

நிலவு அதன் வழக்கமான நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வரும்போது, சுற்றுப்பாதையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவு பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும். அப்போது, நிலவின் வழக்கமான அளவை விட சற்று பெரிய வெளிப்படையான அளவைப் பூமியிலிருந்து பார்க்கலாம். இந்த மிகப்பெரிய பிரகாசமான முழுநிலவே சூப்பர்மூன் ஆகும்.

இந்த நேரத்தில் நிலவானது, சராசரி அளவுள்ள நிலவின் அளவை விட 8 சதவிகிதம் அதிகமாகவும் மற்றும் சராசரி அளவிலான முழு நிலவின் பிரகாசத்தை விட 16 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றும் DAG கூறியுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 1 இல் தோன்றக்கூடிய சூப்பர்மூன், 2023 இன் இரண்டாவது சூப்பர்மூன் ஆகும். இது ஃபுல் ஸ்டர்ஜன் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்த சூப்பர் மூன் கிரேட் லேக்ஸ் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள லேக் சாம்ப்ளைனில் பரவலாகக் காட்சியளிக்கும்.

அதுபோல, ஆகஸ்ட் மாத இறுதியில் இரண்டாவது சூப்பர் மூன் ஒளிரும். இவ்வாறு ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் தோன்றுவதை ப்ளூ மூன் என்று கூறுவார்கள். இந்தாண்டின் மிகப் பிரகாசமான, நெருக்கமான மற்றும் மிகப்பெரிய சூப்பர் மூன் ஆகஸ்ட் 30-31 தோன்றும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, அந்த சமயத்தில் நிலவு பூமியிலிருந்து 357,343 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.

இதனையடுத்து மிக நெருக்கமான சூப்பர் மூனை, நவம்பர் 5, 2025 அன்று நிலவு பூமியிலிருந்து 356,979 கிமீ தொலைவில் இருக்கும் போது பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!