அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியுமா..? UAE குடிவரவு சட்டம் கூறுவது என்ன.?

அமீரகத்திற்கு புலம்பெயரும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுடன் ஒரு சில குற்றங்களுக்காக அவர்களை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினர் வேலை நிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலாவாசியாகவோ மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி வர அனுமதி இருக்கிறதா? மீண்டும் நாட்டிற்குள் நுழையத் தடை இருந்தால் அதை நீக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.

அமீரகத்தில் உள்ள நீதிமன்றம் வழங்குகின்ற குற்றவியல் தீர்ப்புகளின் அடிப்படையில், சட்டவிரோத நடத்தைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர் குறிப்பிட்ட கால சிறைத்தண்டனைக்குப் பிறகு நாடு கடத்தப்படுவார். இது வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் ரெசிடென்ஸ் தொடர்பான ஃபெடரல் ஆணை-சட்ட எண்.29 2021 இன் விதிகளுக்குப் பொருந்தும்.

UAE குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 15 (1) இன் படி, நாட்டின் பொது நலன், பொது பாதுகாப்பு, பொது ஒழுக்கம் அல்லது பொது சுகாதாரம் போன்றவற்றிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் அமீரகத்தில் இருந்து நாடு கடத்தப்படலாம்.

மேலும், குற்ற செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் விசா அல்லது ரெசிடென்ஸ் பெர்மிட் வைத்திருந்தாலும், ஃபெடரல் அட்டர்னி ஜெனரல் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் ஜனாதிபதி அல்லது அவர் பிரதிநிதி ஆகியோரும் அவரை நாடு கடத்த உத்தரவிடலாம் என்று சட்டம் கூறுகிறது.

அதுபோல, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் ஆணையத்தின் உத்தரவின் பேரிலும் எந்தவொரு நபரும் நாடு கடத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் UAE குடிவரவு சட்டத்தின் பிரிவு 18(1) இன் படி, குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டம் கூறுகிறது. அதன்படி, நாடுகடத்தப்பட்டவர் மாநிலத் தலைவரின் (president of state) அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீண்டும் அமீரகத்திற்குள் நுழையலாம்.

அதாவது, ஜனாதிபதியின் அனுமதியின்றி நாடுகடத்தப்பட்டவர் மாநிலத்திற்கு திரும்பக்கூடாது என்று அமீரக சட்டம் கூறப்படுகிறது. ஆகவே, நாடு கடத்தப்படுபவர்கள் மீண்டும் அமீரகத்திற்கு வர விரும்பினால் அதற்கு முறையாக சட்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!