அமீரக சட்டங்கள்

UAE: பணி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத வேலையை செய்பவரா..? உங்களின் உரிமை பற்றி சட்டம் சொல்வது என்ன.? சிறப்பு பதிவு…

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் வேலை விசாவில், அவர்களின் உண்மையான பதவியின் பெயர் குறிப்பிடப்படாமல் வேறு ஒரு பதவியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், அது அவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை அல்லது தொழில் வளர்ச்சியை பாதிக்குமா?பாதிக்கும் எனில், யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற முழு விபரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

UAE வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் படி, ஒரு பணியாளரின் வேலை அனுமதியில் (work permit) உள்ள வேலையிலிருந்து மாறுபட்ட வேறொரு வேலையை அவருக்கு வழங்க முடியாது. எனினும், திடீர் தேவை மற்றும் விபத்தைத் தவிர்க்கவும் அல்லது அதன் விளைவுகளைச் சரிசெய்யவும் என்ற அவசர காலங்களில் அத்தகைய மாறுபட்ட பணியை தற்காலிகமாக வழங்கலாம்.

அதேவேளை, வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 12(2) இன் படி, மேலே குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்கள் அல்லாத சூழலில், பணி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்படாத ஒரு வேலையை பணியாளர் எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டால் முதலாளி அந்த வேலையை அவருக்கு ஒப்படைக்க முடியும். ஆனால், அந்த வேலை 90 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்படக் கூடாது.

இது 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண்.1 இன் பிரிவு 13(1) க்கு இணங்குகிறது, இதில் விபத்தைத் தடுக்க, அல்லது பணியாளரால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய, அத்தகைய வேலைக்கு ஊழியரை நியமிப்பதற்கான அதிகபட்ச வரம்பு வருடத்திற்கு 90 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பணி ஒப்பந்தத்தில் உள்ள வேலையிலிருந்து மாறுபட்ட பணியில் இருந்தால், அந்த பணியாளர் முன்அறிவிப்பு இல்லாமல் வேலையை விட்டு வெளியேறலாம் என்றும் வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 45(4) இல் கூறப்பட்டுள்ளது. எனவே, மேற்கூறிய சட்ட விதிகளின் அடிப்படையில், உங்கள் பதவிக்கு ஏற்ற வேலையை உங்களுக்கு ஒதுக்குமாறு நீங்கள் முதலாளியிடம் கோரலாம்.

இல்லையெனில், உங்கள் தற்போதைய வேலை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய உங்கள் முதலாளியிடம் நீங்கள் முறையிடலாம். உங்கள் முதலாளி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று அவர் உங்களை அச்சுறுத்தவோ கட்டாயப்படுத்தவோ முடியாது என்று வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 14(1) கூறுகிறது.

மேலும், வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 45(4) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அறிவிப்புக் காலம் (notice period) இல்லாமல் உங்கள் வேலையை ராஜினாமா செய்வதையும் நீங்கள் பரிசீலிக்கலாம். இருப்பினும், வேலை ஒப்பந்தத்தில் உங்கள் பதவிக்கு இணங்காத வேலை உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் மற்றும் சான்றுகளை நீங்கள் ஆவணமாக வைத்திருப்பதும் அவசியம்.

அப்போதுதான், உங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை உங்கள் முதலாளி மீறியதாகக் கூறி, அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திடம் நீங்கள் புகார் செய்ய முடியும். எனவே சட்ட விதிகளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் வேலை பழுவை சரிசெய்து கொள்வது சிறந்தது.

Related Articles

Back to top button
error: Content is protected !!