அமீரக செய்திகள்

அபுதாபி: மக்கள்தொகை அதிகமுள்ள இடங்களில் வீடு வீடாக சென்று இலவச கொரோனா பரிசோதனை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் அபுதிதாபியின் முசாஃபா உள்ளிட்ட தொழில்துறை பகுதிகள் உட்பட மக்கள் தொகை அதிகமுள்ள பெரும்பாலான இடங்களில் வீடு வீடாக சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அபுதாபியில் கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கண்டறிய புதுப்பிக்கப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட சோதனை பிரச்சாரத்தின் மூலம் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாக அபுதாபி ஊடக அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த இலவச பரிசோதனையானது அபுதாபி சுகாதாரத் துறை (DoH), சேஹா (SEHA), அபுதாபி காவல்துறை மற்றும் தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி காவல்துறையின் கள ஒருங்கிணைப்பாளர் கேப்டன் டாக்டர் ஆயிஷா அல் மாமரி அவர்கள் கூறுகையில், தற்போது ஷக்பூத் சிட்டியில் (Shakbout City) முடிந்தவரை அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை பிரச்சாரத்திற்கு எமிரேட்ஸ் அறக்கட்டளை தன்னார்வலர்களை வழங்கியது என்று அறக்கட்டளை ஊழியர் ஹசன் அல் அலி கூறினார். அவர் இது குறித்து கூறுகையில், “தன்னார்வலர்கள் ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை எங்களுடன் இருக்கிறார்கள், நாங்கள் இன்னும் அதே உற்சாகத்துடன் செயல்படுகிறோம். தன்னார்வலர்களின் குடும்பங்கள் தன்னார்வலர்கள் வீட்டிலிருந்து விலகி நெடு நாட்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளித்து தொடர்ந்து எங்களை ஊக்குவித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அபுதாபி ஒரு உறுதியான முன்மாதிரி வைத்திருப்பதாகவும், தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைகள் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு ஒரு முக்கிய அங்கமாகும் என்று அபுதாபி சுகாதாரத் துறை தலைவர் அப்துல்லா அல் ஹமீட் ஏற்கெனவே கூறியிருந்தார்.

கொரோனாவிற்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில் சோதனைகளின் எண்ணிக்கை அதன் மக்கள்தொகை எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையைக் கொண்ட உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் தற்பொழுது திகழ்கிறது. (ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில்).

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை ஐக்கிய அரபு அமீரகம் 10.8 மில்லியன் சோதனைகளை நடத்தியுள்ளத. அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, தற்போது 136,430 தினசரி சோதனைகள் அமீரகத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் தேவையான சிகிச்சையை மேற்கொள்வதற்கும் நாடு முழுவதும் சோதனைக்கான திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்துவதற்கான நோக்கத்தை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!