அமீரக சட்டங்கள்

குழந்தை அமீரகத்தை விட்டு வெளியே பிறந்தாலும் ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய ‘Paternity Leave’ எடுக்க உரிமை உள்ளதா..?? தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தனது குழந்தை அமீரகத்திற்கு வெளியே சொந்த நாட்டில் பிறந்தாலும் பெற்றோர் விடுப்பைப் (Paternity leave) பெற உரிமை உள்ளதா? குழந்தையைப் பார்க்க சொந்த நாட்டிற்குச் செல்வதற்கு ஐந்து நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை ஊழியர் எடுக்க முடியுமா? என்று பல ஊழியர்களுக்கு சந்தேகம் இருக்கலாம். இந்த சந்தேகத்திற்கான விளக்கங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

அமீரகத்தில் கடந்த ஆண்டு அமலுக்கு வந்த புதிய அமீரக தொழிலாளர் சட்டம் – 2021 இன் ஃபெடரல் ஆணை எண். 33இன் படி, ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் பெற்றோர் விடுப்பு உட்பட பல்வேறு விடுப்புகளுக்கு உரிமை உண்டு. ஆனால், இந்த விடுமுறையைப் பெற ஐக்கிய அரபு அமீரகத்தில் குழந்தை பிறக்க வேண்டுமா என்று சட்டம் குறிப்பிடவில்லை.

அதேசமயம், நாட்டிற்கு வெளியே ஒரு குழந்தை பிறந்தாலும் இந்த விடுப்பு பொருந்தும் என்பதை இது குறிக்கிறது. நிபந்தனை என்னவென்றால், குழந்தையின் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரேனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் 30 வது பிரிவின் கீழ், தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்புடன் கூடுதலாக இந்த ஊதிய விடுப்பு வழங்கப்படுகிறது. இது குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் தொடர்ச்சியாகவோ அல்லது இடைவிடாததாகவோ இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையின் தந்தை அமீரகத்தில் பணிபுரியும் பட்சத்தில், குழந்தையைப் பார்ப்பதற்காக அவர் சொந்த நாட்டிற்குச் செல்வதைச் சட்டம் தடுக்கவில்லை. ஆனால், இந்த விதியின் கீழ் விடுமுறையைப் பெற, குழந்தை பிறந்ததற்கான ஆதாரத்தை முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!