வளைகுடா செய்திகள்

ஆண்டின் முதல் பாதியில் 5.9 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்று சாதனை படைத்த பஹ்ரைன்… கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 51% அதிகரிப்பு என தகவல்..!!

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வளைகுடா நாடுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களால் வளைகுடா நாடுகளுக்கு வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

அவற்றில் வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் அளித்த சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பஹ்ரைனுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டின் முதல் பாதியில் 51% அதிகரித்து, 3.9 மில்லியனில் இருந்து 5.9 மில்லியனாக அதிகரித்துள்ளது என பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்த வேண்டும் என்று வகுக்கப்பட்ட 2022-2026 சுற்றுலா உத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் முன்னேற்றத்தை கண்டு வருவதாக பஹ்ரைனின் சுற்றுலா அமைச்சர் பாத்திமா பின்த் ஜாஃபர் அல் சைராஃபி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக விருந்தோம்பல் துறையின் பங்களிப்பையும், சுற்றுலா துறையின் பங்களிப்பையும் இனிவரும் காலங்களில் இதைவிட அதிகப்படுத்துவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனில் சுற்றுலாவிற்காக பயணிகள் கழித்த மொத்த இரவுகளின் எண்ணிக்கை 54% அதிகரித்து 2023 இன் முதல் பாதியில் 8.9 மில்லியனை எட்டியுள்ளது. இதே காலப்பகுதியில் கடந்த 2022ல் இது 5.8 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக உள்நாட்டின் மொத்த சுற்றுலா வருவாய் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 48% அதிகரித்து 924 மில்லியன் தினார்களை எட்டியது என்றும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 623 மில்லியன் தினாராக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை 43% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில், இல் 2.3 மில்லியன் பார்வையாளர்களை பஹ்ரைன் வரவேற்ற நிலையில் நடப்பு ஆண்டான 2023 இல் 3.3 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 1.6 மில்லியன் சுற்றுலாவாசிகள் பதிவான நிலையில் 2023 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் சுமார் 2.6 மில்லியன் பார்வையாளர்கள் பதிவாகியுள்ளனர். இனிவரும் காலங்களிலும், பஹ்ரைன் நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சி காணும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!