வளைகுடா செய்திகள்

தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த ஆய்வு பிரச்சாரங்களை மேற்கொண்ட பஹ்ரைன்… விதிமீறல் புரிந்த 2,112 வெளிநாட்டவர்கள் நாடுகடத்தல்..!!

பஹ்ரைன் நாட்டின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (LMRA) இந்த ஆண்டின் முதல் பாதியில் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆய்வு வருகைகள் மற்றும் கூட்டு பிரச்சாரங்களின் எண்ணிக்கையில் 63.8% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

LMRA இன் தலைமை நிர்வாக அதிகாரி நௌஃப் அப்துல்ரஹ்மான் ஜம்ஷீர் இது பற்றி கூறுகையில், தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தினை தக்க வைத்துக் கொள்வதற்கும் இந்த ஆய்வுகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் அரசு ஏற்கனவே வகுத்துள்ள தேசிய தொழிலாளர் சந்தைத் திட்டம் 2023-2026ஐ செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக தொழிலாளர் சந்தையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையை மேம்படுத்துதல் மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், தேசிய வேலைவாய்ப்பைப் பேணுதல், நிலையான வேலை வாய்ப்புகளை வழங்குதல், பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்துதல், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்தல், மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை மூலம் தொழிலாளர் சந்தையின் செயல்திறனை உயர்த்தும் நோக்கில் இந்த ஆய்வுகள் செய்யப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

மேலும், தீவிர ஆய்வுப் பிரச்சாரங்களின் விளைவாக 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பொது வழக்கு விசாரணைக்காக 1135 குற்றவியல் மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 152% அதிகரிப்பு என்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். பஹ்ரைனில் உள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு, சட்டப் பொறுப்புக்கு அவர்களை அம்பலப்படுத்தும் குற்றங்களைத் தவிர்க்குமாறும், குறிப்பாக மீண்டும் மீண்டும் மீறுதல்கள், குறிப்பாக வேலை அனுமதி விதிமுறைகளை மீறும் வகையில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறும் ஜம்ஷீர் முதலாளிகளையும் தொழிலாளர்களையும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஆய்வுப் பிரச்சாரங்களின் போது பிடிபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் 2,112 வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்றும், சட்டங்களுக்கு இணங்காத முதலாளிகளுக்கு 3 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் ஆயிரம் தினார்களுக்கு குறையாத மற்றும் இரண்டாயிரம் தினார்களுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றம் மீண்டும் நிகழும் பட்சத்தில், 6 மாதங்கள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாயிரம் தினார்களுக்கு குறையாத மற்றும் நான்காயிரம் தினார்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் வீட்டுப் பணியாளர்களுக்கான பணி அனுமதிக்கான நிபந்தனைகளை மீறுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது, இதற்கான அபராதம் இரு மடங்காக விதிக்கப்படும்.

வெளிநாட்டுத் தொழிலாளியின் குற்றங்களைப் பொறுத்தவரை, வேலை அனுமதியின்றி நாட்டில் எந்தவொரு வேலையிலும் ஈடுபடும் எந்தவொரு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விரிக்கப்படும். மேலும், பஹ்ரைனில் இருந்து வெளிநாட்டவரை நாடு கடத்தவும், 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக அவர் திரும்புவதற்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!