அமீரக செய்திகள்

தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகளை இனி முதலாளிகள் கையில் வைத்திருக்கக் கூடாது… ஓமானின் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் வெளியான அறிவிப்பு!

ஓமான் நாட்டின் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களால் திருத்தப்பட்ட தொழிலாளர்கள் சட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இச்சட்டமானது முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே உள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சமநிலைப்படுத்துவதையும், மேலும் சமமான பணிச்சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாட்டில் தொழிலாளர் உரிமைகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையில், ஒரு பணியாளரின் சேவையை முதலாளி எந்த சூழ்நிலையில் நிறுத்தலாம் என்பதை சட்டம் கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாளர் சட்டம் 53/2023 என அறியப்படும், அரச ஆணை மூலம் வெளியிடப்பட்ட இந்த சட்டம், பிரிவு 43 ஐ உள்ளடக்கியது, இது குறிப்பாக பணியாளர் பணிநீக்கத்தின் நிபந்தனைகளை பற்றி கூறுகின்றது.

பணிநீக்கத்திற்கான சட்டங்கள்

புதிய சட்டத்தின்படி, பல நியாயமான சூழ்நிலைகளில் மட்டுமே ஒரு பணியாளரை பணிநீக்கம் செய்ய முடியும். முதலாவதாக, ஒரு பணியாளர் திறம்பட செயல்படத் தவறினால் அதனை மேம்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும்.

இந்தக் காலகட்டத்திற்குப் பிறகும் செயல்திறன் நிலை திருப்தியற்றதாக இருந்தால், சேவையை நிறுத்தலாம். இருப்பினும், ஊழியர் ஓமானியாக இருந்தால், நிறுவனம் அவருக்குப் பதிலாக வேறொரு ஓமானி நாட்டவரை நியமிக்க வேண்டும்.

இரண்டாவதாக, வணிகம் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக நிறுத்தப்பட்டால், வணிகம் திவாலானதாக அறிவித்தால், அதன் செயல்பாட்டின் நோக்கத்தில் குறைப்பு ஏற்பட்டால், அல்லது ஒரு மாற்று உற்பத்தி முறை செயல்படுத்தப்பட்டால், தொழிலாளர்களை பணியில் இருந்து நிறுத்தலாம்.

மூன்றாவதாக, நிறுவனத்தின் பொருளாதார காரணிகள் காரணமாக ஊழியரை பணியில் இருந்து நீக்கலாம் என்று சட்டம் கோடிட்டுக் காட்டுகிறது. அத்தகைய சூழ்நிலையில், முதலாளி தொழிலாளர் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக குழுவிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். குழுவின் ஒப்புதலின் பெயரில் நிறுவனத்தை திவால் ஆகாமல் தடுப்பதற்காக குறைவான தொழிலாளர்களை கொண்டு வணிகத்தை தொடரலாம்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு

புதிய தொழிலாளர் சட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பல்வேறு பாதுகாப்புகளும் உள்ளன. எழுத்துப்பூர்வ அனுமதியின்றி ஒரு பணியாளரின் பாஸ்போர்ட் அல்லது தனிப்பட்ட ஆவணங்களை முதலாளிகள் வைத்திருப்பதை இது தடை செய்கிறது. ஒரு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டால், அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும்.

அதேபோல் தொழிலாளி நிறுவனத்தில் இணைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு முப்பது நாட்களுக்கு குறையாத வருடாந்திர விடுப்பு எடுக்க உரிமை பெற்றவர் ஆவார்.

ஓமான் அல்லாத தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான விமான டிக்கெட்டுக்கு உரிமை உண்டு, மேலும் அவர்கள் உத்தியோகபூர்வ விடுமுறை நாட்களில் அவர்களின் முழு ஊதியத்திற்கும் தகுதியுடையவர்கள். நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணியாளரின் கோரிக்கையின் பேரில், முதலாளி ஊதியம் இல்லாத சிறப்பு விடுமுறையையும் வழங்கலாம்.

இவ்வாறு திருத்தப்பட்ட சட்டமானது தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய இருவருக்கும் நன்மை அளிக்கும் வகையில் பல்வேறு கொள்கைகளை கொண்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!